சுமித் ஷா மற்றும் சுபாஷ் சௌதரி ஆகிய இருவரும் இணைந்து 2020ஆம் ஆண்டு தொடங்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம் துகான். இது ஒரு மொபைல் செயலி நிறுவனம். இந்தச் செயலியின் மூலம் சிறு தொழில் முனைவோர் தங்களுடைய பொருட்களை மின்னணு முறையில் விற்க உதவி செய்யப்படுகிறது. அவர்கள் தங்களுடைய பொருட்களை இ-வர்த்தக முறையில் விற்க இந்த செயலி உதவி அளித்து வருகிறது. இதுவரை இந்த செயலியின் மூலம் சுமார் 3.5 மில்லியன் சிறு குறு தொழில் முனைவோர் பயன் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வேகமாக வளர்ந்து வரும் இந்த நிறுவனம் தற்போது பிரீ சிரீஸ் ஏ முதலீடு மூலம் சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஈர்த்துள்ளது. அதில் குறிப்பாக ஒயோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால் மற்றும் நத்திங் சிஇஒ காரல் பே உள்ளிட்ட சில முக்கியமான நபர்களும் முதலீடு செய்துள்ளனர். இந்த 11 மில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் அந்த நிறுவனத்தின் மதிப்பு தற்போது 71 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
இந்த வகை முதலீட்டில் எப்போதும் இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் 2 மில்லியன் முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈர்க்கும். அந்தவகையில் பார்க்கும் போது துகான் நிறுவனத்திற்கு இந்த முதலீடு தொகை குறைவு என்றாலும் தொடங்கி ஒரு வருடம் கூட நிறைவு அடையாத நிறுவனத்திற்கு இத்தகைய நபர்கள் முன்வந்து முதலீடு செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சுற்று முதலீட்டில் முதலீட்டாளர்கள் பெரும்பாலும் நிறுவனத்தின் செயல்பாட்டைவிட அதன் ஐடியா மற்றும் அந்த நிறுவனத்தின் வருங்கால திட்டம் ஆகியவற்றை பார்த்து முதலீடு செய்வது வழக்கம். ஆகவே இந்த துகான் நிறுவனத்தின் ஐடியா மற்றும் அதன் வருங்கால திட்டம் ஆகியவற்றை பார்த்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் சீட் ஃபண்டிங் முறையில் மாட்ரிக் மற்றும் லைட்ஸ்பீடு நிறுவனங்களிடம் துகான் நிறுவனம் 6 மில்லியன் டாலர்கள் முதலீட்டாக பெற்று இருந்தது. இவை தவிர கணக்கு வழக்குகளை இணையத்தில் வைத்து கொள்ளும் காத்தாபுக் செயலி நிறுவனமும் துகான் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. தற்போது இந்த துகான் செயலியில் 2000 வாடிக்கையாளர் பிரிமியம் முறை சந்தா செலுத்தி சேவைகளை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த எண்ணிக்கையை அதிகமாக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க: சுற்றுலா சரிவு.. தேயிலை தொய்வு.. இலங்கையில் புதிய சிக்கல்..!