ஜுலை 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்கள், அபராதத்துடன் எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை இங்கு அறியலாம்.
வருமான வரி கணக்கு தாக்கல்:
2022-23 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. 6.77 கோடி பேர் தங்களது கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 31ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 5.83 கோடி கணக்குகளை காட்டிலும், நடப்பாண்டில் 16.1% கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்தாலும், கூடுதல் அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வருமான வரிதாக்கல் செய்ய தவறியவர்கள் முன்னிலையில் உள்ள அடுத்த ஆப்ஷன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தாமதமான ஐடிஆர்:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டவர்களுக்கு தாமதமான ITR ஒரு முதன்மையான வாய்ப்பாக உள்ளது. வருமான வரித்துறையின் எந்தவொரு கடுமையான நடவடிக்கைக்கும் ஆளாகாமல் இருந்த இந்த வழி உதவுகிறது. இருப்பினும், வரித் தொகைக்கு அபராதம் மற்றும் வட்டிகளை செலுத்த வேண்டி உள்ளது. சட்டத்தின் பிரிவு 234F இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி தாமதமான ITR ஐ தாக்கல் செய்யும் போது அபராதம் விதிக்கப்படுகிறது. 5 லட்சத்திற்கு மிகாமல் வருமானம் ஈட்டும் சிறிய வரி செலுத்துவோர் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருந்தால், தாமதமாக ஐடிஆர் தாக்கல் செய்ததற்காக ரூ.5,000 அபராதம் விதிக்கப்படலாம். மாதத்திற்கு 1% வட்டி என்ற அடிப்படையில், டிசம்பர் 31ம் தேதி வரையில் பொதுமக்கள் தங்களது கணக்கை தாக்கல் செய்யலாம்.
திருத்தப்பட்ட ஐடிஆர்:
திருத்தப்பட்ட ஐடிஆர் என்பது இரண்டாவது வாய்ப்பாகும். குறிப்பிட மறந்த வங்கிக் கணக்குகளின் விவரங்கள் அல்லது நிலையான வைப்புத் தொகையில் இருந்து கிடைக்கப்பெற்ற குறிப்பிடப்படாத வட்டி போன்ற பிழைகளை திருத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். அதேநேரம், கூடுதல் வருமானத்தை அறிவிப்பதன் மூலம் அபராத வட்டியுடன் கூடுதல் வரி செலுத்தக்கூடும். சட்டத்தின் பிரிவு 139(5) இன் கீழ் இந்த வாய்ப்பை பயன்படுத்த டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் உள்ளது. தாமதமான ஐடிஆர்களும் திருத்தப்படலாம் என்றாலும், கடைசி நிமிடத் தாக்கல்கள் பிழை திருத்தத்திற்கு இடமில்லாமல் போகலாம். திருத்தங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை என்றாலும், அதிகப்படியான திருத்தங்கள் வரித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம்.
புதுப்பிக்கப்பட்ட ஐடிஆர்:
புதுப்பிக்கப்பட்ட ஐடிஆர் என்பது 2022ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு புதிய வாய்ப்பாகும். இதன் மூலம், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை 24 மாதங்களுக்குப் பிறகும் தாக்கல் செய்யலாம். முந்தைய தாக்கல் அல்லது தவறவிட்ட தாக்கல்களைப் பொருட்படுத்தாமல், புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்ய இது அனுமதிக்கிறது. இருப்பினும், புதுப்பிக்கப்பட்ட வருமானம் குறைந்த வருமானத்தை அறிவிக்கவோ, இழப்புகளை கோரவோ அல்லது வருமானத்தை திரும்பப்பெற கோரவோ பயன்படுத்த முடியாது. அதேநேரம், ஐடிஆர்-யு மதிப்பீட்டு ஆண்டு முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டால், வரிப் பொறுப்பு மற்றும் வட்டியில் கூடுதலாக 25 சதவீதத் தொகை அபராதமாக விதிக்கப்படும். ஒரு வருடம் கழித்து ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்தால், இந்த கூடுதல் தொகை வரி மற்றும் வட்டியில் 50 சதவீதமாக உயரும்.
இதையும் படிங்க..