பாகிஸ்தான் நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தந்த இம்ரான்கான், 1996-ஆம் ஆண்டு தெஹ்ரீக் –இ – இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சி 2018-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் நாட்டின் 22-வது பிரதமராக பதவியேற்றார். அந்த நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2022-ஆம் ஆண்டு இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.


இம்ரான்கான் பிரதமராக இருந்த காலத்தில் அரசு முறை பயணமாக சில வெளிநாடுகளுக்கு சென்றார். பாகிஸ்தான் சட்ட விதிப்படி, அந்த நாட்டு பிரதமராக பொறுப்பு வகிக்கும் ஒருவர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது வழங்கப்படும் பரிசுப்பொருட்களை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி.


அந்த பரிசுப்பொருட்களை சேமித்து பராமரிக்கும் பணியை தோஷகானா துறை செய்து வருகிறது. ஆனால், இம்ரான் கானோ அதை அரசு கருவூலத்தில் ஒப்படைக்காமல் தன்னுடைய சொந்த கணக்கில் சேர்த்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், இம்ரான் கான் குற்றவாளியாக அறிவித்த இஸ்லாமாபாத் செஷன்ஸ் நீதிமன்றம், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதை தொடர்ந்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்கள் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னாள் பிரதமர்களை கைது செய்வது அங்கு தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர்களின் பட்டியலை கீழே காண்போம்.


ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி:


பாகிஸ்தான் நாட்டின் ஐந்தாவது பிரதமரான இவர், கிழக்கு பாகிஸ்தானை (தற்போது வங்கதேசம்) சேர்ந்தவர். கடந்த 1962ஆம் ஆண்டு,  ஜனவரி மாதம், தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக போலிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், ராணுவ ஜெனரல் அயூப் கான் சொல்வதை கேட்காத காரணத்தால்தான், இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


சுல்பிகர் அலி பூட்டோ:


பாகிஸ்தான் நாட்டின் 9ஆவது பிரதமரான இவர், கடந்த 1974ஆம் ஆண்டு, தன்னுடைய அரசியல் எதிரியை கொலை செய்ய சதி செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1979ஆம் ஆண்டு, ஏப்ரல் 4ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.


பெனாசிர் பூட்டோ:


கடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையிலும், 1993 முதல் 1996 வரையிலும் இரண்டு முறை பிரதமராகப் பதவி வகித்தவர் பெனாசிர் பூட்டோ. பாகிஸ்தான் நாட்டின் ஒரே பெண் பிரதமரான இவர் பலமுறை கைது செய்யப்பட்டார். முதலில் 1985இல், 90 நாட்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.


கடந்த 1986-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கராச்சியில் நடந்த ஒரு பேரணியில் ராணுவ தளபதி ஜியாவுல் ஹக்கை விமர்சித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 1999-ஆம் ஆண்டு, ஊழல் வழக்கில் இவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில், பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார்.


நவாஸ் ஷெரீப்:


ஜெனரல் பர்வேஸ் முஷாரப், பாகிஸ்தான் அதிபராக பொறுப்பேற்ற பிறகு, 1999-இல் கைது செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப், பின்னர் 10 ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்டார்.


கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூலை மாதம், ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கும் அவரது மகள் மரியமுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில், அல்-அஜிசியா ஸ்டீல் மில்ஸ் ஊழல் வழக்கில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019-இல் சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவர், பாகிஸ்தானுக்கு திரும்பவே இல்லை.


ஷாஹித் ககான் அப்பாஸி:


பாகிஸ்தான் நாட்டின் 21ஆவது பிரதமரான இவர், 2019ஆம் ஆண்டு, இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஊழல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஆனால், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.