இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி சீயான் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப இருப்பதாகவும், எப்படி தெலுங்கு சினிமாவிற்கு ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இருந்ததோ அதே போல் தமிழில் தங்கலான் இருக்கும் என்றும் கூறியுள்ளார் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன்.


பா.ரஞ்சித்


தமிழ் சினிமாவில் இதுவரை பின்பற்றப்பட்டுவந்த பல கட்டமைப்புகளை உடைத்தவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அவர்களது வாழ்க்கையை தனது ஒவ்வொரு படத்தின் மூலமாகவும் கோடிக்கணக்கான மக்களுக்கு காட்டியவர். இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பல்வேறு முன்மாதிரியான செயல்களை செய்து வருகிறார். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா, நட்சத்திரம் நகர்கிறது என தனது ஒவ்வொரு படத்திலும்  புதிய கதைக்களத்தை தேர்வு செய்து கலை நேர்த்தியுடன் படங்களை உருவாக்கிவதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இதுவரை தான் இயக்கிய படங்களைவிட மிகப்பெரிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார் ரஞ்சித்.


தங்கலான்


உண்மை சம்பவங்களை மையப்படுத்தி பா. ரஞ்சித் இயக்கி வரும் சரித்திரக் கதை தங்கலான். சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.


கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. சீயான் விக்ரமின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக தங்கலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கலான் படம் குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் தனஞ்செயன் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்


 நிச்சயம் ஆஸ்காருக்கு அனுப்புவோம்


“தங்கலான் திரைப்படத்தின் பட்ஜெட் திட்டமிடப்பட்டதை விட பலமடங்கு அதிகரித்து தற்போது படத்தின் பட்ஜெட் 100 கோடிகளை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரத்தமும் சதையுமாக இந்தப் படத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள். இந்தப் படத்தை ஆஸ்கர் திரைப்பட விழாவிற்கு அனுப்புவதில்  தயாரிப்பாளர் உறுதியாக இருக்கிறார். எப்படி தெலுங்கு சினிமாவிற்கு ஆர்.ஆர். ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதை கொண்டு சேர்த்ததோ, அதே போல் தமிழுக்கு ஆஸ்கர் விருதை தங்கலான் பெற்றுத் தரும் என தான் உறுதியாக நம்புகிறோம்” என தனஞ்செயன் கூறியுள்ளார்.


பொங்கல் ரிலீஸ்


 நீண்ட நாட்களாக படம் பிடிக்கப்பட்டு வந்த தங்கலான் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்து படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டதால் சில காலம் படப்பிடிப்பு தாமதாகியதும் ஒரு காரணம். இந்நிலையில் தங்கலான் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு  வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.