இந்தியாவின் முன்னணி தனியார் வங்கி நிறுவனங்களுள் ஒன்றான ஆக்சிஸ் வங்கி சமீபத்தில் சேமிப்பு, வருமானம் ஆகிய கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய கட்டணங்களை வெளியிட்டுள்ளது. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை வைத்திருக்க தவறுபவர்களுக்கான சேவைக் கட்டணமும் இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் சில விதிமுறைகளும், வரும் ஜூலை 1 முதல் வேறு சில விதிமுறைகளும் அமலுக்கு வருவதாக ஆக்சிஸ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த ஆக்சிஸ் வங்கியின் சேவைக் கட்டணங்களை இங்கே குறிப்பிட்டுள்ளோம்... 



சராசரி மாதாந்திர இருப்பு: அனைத்து சேமிப்பு மற்றும் வருமான வங்கிக் கணக்குகளின் சராசரி மாதாந்திர இருப்புத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதிகளுக்கான  சராசரி மாதாந்திர இருப்புத் தொகை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. கிராமப் புறங்களில் உள்ள வங்கிக் கணக்குகளுக்கும் இதே உத்தரவு பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 


மாதாந்திர சேவைக் கட்டணம்: சராசரி மாதாந்திர இருப்புத் தொகையை வைக்கத் தவறுவோருக்கான கட்டணம் சுமார் 7.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொகையின் அதிகபட்ச வரம்பாக இருந்த 500 ரூபாய் தற்போது 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 


நகர்ப்புறம் - 600 ரூபாய்
புறநகர் - 300 ரூபாய்
கிராமப்புறம் - 250 ரூபாய்


இந்த சேவைக் கட்டணங்கள் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. 



இலவசமாக பணப்பரிமாற்றம் மேற்கொள்வதற்கான மாதாந்திர வரம்பு: மாதாந்திரப் பணப் பரிவர்த்தனைகள் குறித்த கட்டணத்தையும் ஆக்சிஸ் வங்கி மாற்றியுள்ளது. இதில் முதல் 5 பணப் பரிவர்த்தனைகள் அல்லது 1.5 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை அல்லது முதலில் எது முடிகிறதோ அது கணக்கில் கொள்ளப்படுவது என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்பு, முதல் 5 பணப் பரிவர்த்தனைகள் அல்லது 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனை என்பது வரம்பாக விதிக்கப்பட்டிருந்தது. 


செக் புக் கட்டணம்: ஆக்சிஸ் வங்கி வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின்படி, வங்கிக் கணக்கு ஸ்டேட்மெண்ட் மற்றும் டூப்ளிகேட் பாஸ்புக் கட்டணங்கள் 75 ரூபாயில் இருந்து தற்போது 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக செக் புக் கட்டணமும் மாற்றப்பட்டுள்ளது. ஒரு பக்கத்திற்கு 2.5 ரூபாய் என்று இருந்த கட்டணம் தற்போது ஒரு பக்கத்திற்கு 4 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. 


`இந்தக் கட்டணங்களுள் வரி கணக்கில் கொள்ளப்படவில்லை. இந்தக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வரி பொருந்தும்’ என ஆக்சிஸ் வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளது.