ஆக்சிஸ் வங்கி தனது வங்கி பணப் பரிவர்த்தனைக் கொள்கைகள் பல்வேறு புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதுபற்றி அந்நிறுவனம், தனது இணையதளத்தில் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: 


மாதாந்திர மினிமம் பேலன்ஸ்.. ஆக்சிஸ் வங்கிக் கணக்கில் இனி மாதாந்திர மினிமம் பேலன்ஸ் என்பது ரூ.12,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அது வெறும் ரூ.10,000 ஆகத்தான் இருந்தது. அதேபோல் ஒவ்வொரு மாதமும் இலவசமாக மேற்கொள்ளக்கூடிய பணப்பரிவர்த்தனையின் அளவும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.


இவை இரண்டுமே ஏப்ரல் 1 ஆம் தேதியே புழக்கத்தில் வந்துவிட்டது.


ஆனால், மினிமம் பேலன்ஸ் 12,000 ரூபாய் என்பதில் ஒரு விதிமுறை இருக்கிறது. மெட்ரோ நகரம் மற்றும் நகர்ப்புற வாசிகள் வைத்திருக்கும் ஈஸி சேவிங்க்ஸ் ஸ்கீம் அல்லது அதற்கு இணையான ஸ்கீம்களுக்கு மட்டுமே இந்த மினிமம் பேலன்ஸ் உயர்வு அமலாகும். ஜீரோ பேலன்ஸ் கணக்கோ அல்லது வேறு மினிமம் பேலன்ஸ் வரையறை கணக்குக்கோ இது பொருந்தாது. ஒரு சில வங்கிகளுக்கு ரூ.500 குறைந்தபட்ச இருப்பாக இருக்க வேண்டும். சில வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கு ரூ.5000 ரூபாய் மினிமம் பேலன்ஸாக இருக்க வேண்டும். ஆக்சிஸ் வங்கியின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த மினிமம் பேலன்ஸ் தொகை அதிகரிப்பு என்பது உள்நாட்டு சேமிப்பு கணக்குகள் மற்றும் என்ஆர்ஐ சேமிப்பு கணக்குகள் என்ற இரண்டு கணக்குகளுக்குமே பொருந்தும். அது மட்டுமின்றி டிஜிட்டல் மற்றும் சேவிங்ஸ் SBEZY ஈக்வலன்ட், ஸ்மார்ட் ப்ரிவிலேஜ் மற்றும் வேறு சில கணக்குகளுக்கும் பொருந்தும்.


மினிமம் பேலன்ஸ் தொகையை உங்கள் கணக்கில் நீங்கள் பராமரிக்க விட்டால் அதற்கு உரிய கட்டணம் விதிக்கப்படும். 


வங்கிப் பணப்பரிவர்த்தனை அளவில் மாற்றம்..


ஆக்சிஸ் வங்கி புதிய விதிமுறைகளின்படி வங்கி பணிபரிவர்த்தனைக்கான எல்லையும் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2 லட்சம் பணத்தை கட்டணம் ஏதுமின்றி பரிவர்த்தனை செய்ய முடிந்தது. இனி ரூ.1.5 லட்சத்தை மட்டுமே அவ்வாறாக பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த 2 லட்சத்தை 4 முறை பிரித்தோ அல்லது ஒரே முறையாகவோ கட்டணமில்லாமல் செலுத்தலாம். இப்போது அது ரூ.1.5 லட்சம், 4 முறை பிரித்தோ இல்லை ஒரே முறையோ என்று மாறியுள்ளது.


ஏடிஎம் கட்டணம் எவ்வளவு?
ஆக்சிஸ் வங்கியைப் பொறுத்தவரையில், இலவச வரம்பைத் தாண்டி ஆக்சிஸ் பேங்க் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஆக்சிஸ் ஏடிஎம் அல்லது மற்ற ஏடிஎம்களில் பேலன்ஸ் செக்கிங் போன்ற சேவைகளுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.


இவ்வாறு ஆக்சிஸ் வங்கி இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.