பாரத்பே நிறுவனத்தின் தலைவர்களிடையேயான கருத்து மோதல் முற்றியுள்ளது. பாரத்பே நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனரான அஷ்னீர் க்ரோவர் இருதரப்புக்கும் இடையே அண்மையில் கருத்து மோதல் வெடித்தது. ஆனால் நாளுக்கு நாள் அது குறைந்தபாடில்லை.


பாரத்பே மற்றும் அஷ்னீர் க்ரோவர் இடையேயான கருத்து வேறுபாடு குறைய மறுக்கிறது. கசப்பான வார்த்தைகள் அடிக்கடி இருதரப்புக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் பரிமாறப்படுகின்றன. மேலும், சமீபத்தில் லிங்க்ட் இன்னில் ஒரு ஊழியர் தனது இடுகையில் ஊதியம் வழங்கப்படாததாகக் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இந்த மோதல் வேறு ஒரு கோணத்தை அடைந்துள்ளது.


கடந்த புதன்கிழமை, BharatPe இல் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர், அவரும் மற்ற ஊழியர்களும் மார்ச் மாதத்திற்கான சம்பளத்தைப் பெறவில்லை என்று LinkedIn இல் தனது பதிவில் குற்றம்சாட்டி இருந்தார்.


"பாரத்பே நிறுவனம் தொடங்கியதிலிருந்து நாங்கள் உடன் இருந்தோம், இப்போது உங்கள் உள் அரசியலால் நாங்கள் எங்கும் இல்லை" என்று அந்த நபர் எழுதி இருந்தார். பாரத்பே தலைமை நிர்வாக அதிகாரி சுஹைல் சமீர் மற்றும் இணை நிறுவனர்களான அஷ்னீர் குரோவர் மற்றும் ஷாஷ்வத் நக்ரானி ஆகியோரைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு எழுதி இருந்தார்.


நிறுவனத்தின் சிறிய செலவுகளுக்காக அவர்கள் தங்கள் பாக்கெட்டுகளில் இருந்து செலவழித்த பணத்தை பாரத்பே நிறுவனம் திருப்பித் தரவில்லை என்றும் அவர் கூறினார்.






"நாங்கள் ஏழைகள், எங்கள் வருமானத்தில்தான் வீடுகள் இயங்குகின்றன, சிறிய குழந்தைகளை நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்," என்றும் அவர் மேலும் கூறினார். "பாரத்பேயின் அனைத்து அதிகாரிகளும் அலுவலகப் பணத்தில் கோவா பயணத்தை அனுபவிக்கிறார்கள், நாங்கள் ஊழியர்கள் சம்பளம் மற்றும் வேலைக்காக போராடுகிறோம். நீங்களெல்லாம் என்ன மாதிரியான தலைவர்கள்." என்று அவர் கோபமாகப் பதிவிட்டுள்ளார்.


இந்த உரையாடலில் இணைந்துகொண்ட அஷ்னீர் க்ரோவரின் சகோதரி ஆஷ்மா க்ரோவர் சம்பளம் எங்கே என நிறுவனத்தைக் கேள்வி எழுப்பினார்.


அதற்கு பதிலளித்த நிறுவனத்தின் தலைவர் சுஹைல் சமீர், உங்கள் சகோதரர் அந்தப் பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார் எனக் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு பெரும் நிறுவனத்தின் தலைவர்கள் பொதுவெளியில் இவ்வாறு குழாயடிச் சண்டையில் ஈடுபடுவது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.