இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யாபாலன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து, சிறந்த நடிகையாக பல விருதுகளுடன் இன்று வரை வெற்றி நாயகியாக கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தட்டிச் சென்ற நிலையில் இவர் ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படத்தில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமாகி உள்ளார். பாலோ தேகோ என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்கு அறிமுகமான வித்யாபாலன். இந்தியில் பரிநீத்தா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களுக்கு தனது சிறந்த அறிமுகமானது மட்டுமல்லாமல் அந்த ஆண்டு பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார். 



தமிழில் உச்ச நடிகராக உள்ள தல அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் வந்து காட்சியளித்த வித்யாபாலன், இதற்கு முன் தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒருசேர வெளியான உருமி திரைப்படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி டர்ட்டி பிக்சர் என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்று ஹிந்தி திரைப்படத் துறையை கலங்கடித்து வந்துள்ளார். திரைப்படங்களை பார்த்து தேர்ந்தெடுத்து சிறந்த கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து இந்தியாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வரும் இவர் திருமணமானவர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்கி உள்ளார்.



சமூகத்தில் பாலின ஏற்றத்தாழ்வு பற்றிப் பேசிய வித்யா பாலன், "ஒரு ஜோடி திருமணம் செய்து கொள்ளும்போது, ​​​​மக்கள் 'ஈருடல் ஓருயிர்', 'உடல்தான் வேறு வேறு மனம் ஒன்று', 'மனங்கள் இணைவது', போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்துகிறார்கள், நான் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன், தயவு செய்து கேளுங்கள், உடலும், உயிரும், நம் வாழ்வும், நிலையானது இல்லை, இவற்றின் மூலம் பெண்களாகிய நாம் நம்மைப் பார்க்கும் விதத்தில் மாற்றம் ஏற்படுகிறது. நம் வாழ்விலிருந்து நாம் என்ன விரும்புகிறோம் எனபதில் தெளிவு வேண்டும். நம் தனித்தன்மை வெளிப்பட வேண்டும்." என்று வித்யா பாலன் மேலும் கூறினார். இவர் பேசிய கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான கருத்துகள் வந்துகொண்டுள்ளன. சிலர் அந்த வார்த்தைகள் இணை வாழ்வின் அன்யோன்யம் என்று கூறி வரும் நிலையில், சிலர் அந்த வார்த்தைகள் நம்மை சுதந்திரத்தில் இருந்து வெகு தூரம் இழுத்து சென்று கட்டிப்போடும் வாக்கியங்கள் என்றும் கூறி வருகின்றனர்.