திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள யாகப்பபுரத்தை சேர்ந்தவர் அழகி (40). இவர் கடந்த 22-2-2001 அன்று மருங்காபுரி பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசு விரைவு பேருந்து மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து தங்களது தாயின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு அவருடைய மகனும், மகளும் திருச்சி 3 ஆவது கூடுதல் சப்-நீமன்றம் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களுக்கு  3 லட்சத்து 96 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து அழகியின் மகனும், மகளும் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம், பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டியுடன் ரூ.9 லட்சத்து 94 ஆயிரத்து 940 வழங்க அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். அதன்பின்னும் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோர்ட்டு அமீனா மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் வக்கீல் ஆகியோர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்று சென்னை செல்ல தயாராக இருந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டுக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

 



 

இதேபோல் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த அந்தோணிமுத்து (68) என்பவர் கடந்த 5-1-2013 அன்று திருச்சி மதுரை சாலையில் எடமலைபட்டிபுதூர் பிரிவு அருகே சாலையை கடக்க முயன்றபோது அரசு பஸ் மோதி படுகாயம் அடைந்தார். இதனால் அவர் தனக்கு இழப்பீடு கேட்டு திருச்சி சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு 7 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த தொகையை வழங்காததால் அவர் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தங்கமணி வட்டியுடன்  12 லட்சத்து 92 ஆயிரத்து 123 ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதையும் அரசு போக்குவரத்து கழகம் செலுத்தவில்லை. இதனால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து  அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான ஒரு பேருந்தை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

 



 

மேலும் அரசு பேருந்தினால் விபத்து ஏற்பட்டு பாதிக்கபட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். காலதாமதம் படுத்தி பாதிக்கபட்டவர்களை கஷ்டபடுத்துவது போன்ற செயல்களில் போக்குவரத்து கழகம் நடந்துகொள்ள கூடாது. குறிப்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட பிறகும் அலட்சியபோக்கில் செயல்பட்டது கண்டிக்கதக்கது என நீதிபதி தெரிவித்தார்.