கொரோனாவின் தாக்கத்தாலும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாலும் மின்னணு சாதனங்கள், செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை பெருமளவில் குறைத்துவிட்டன. ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டது மட்டுமின்றி ஆன்லைன் விற்பனையும் நிறுத்தப்பட்டது. இதனால் செல்போன் மற்றும் மின்னணு சாதனங்கள் விற்பனை தேங்கியுள்ளது. பல நிறுவனங்கள் ஆலைகளை தற்காலிகமாக மூடியுள்ளன.  


குறிப்பாக எல்ஜி, பானாசோனிக்,விவோ,ஓப்போ,காட்ரெஜ் போன்ற நிறுவனங்கள் ஆலைகளின் பெரும்பகுதியை மூடியுள்ளன. சில நிறுவனங்கள் குறைந்த அளவு ஊழியர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆலையின் குறிப்பிட்ட பகுதியை இயக்கி வருகின்றன.சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சார்ந்த நிறுவனங்கள் ஆலைகளை குறைந்த ஆட்களை கொண்டே இயக்குகின்றன. ஆனால் வழக்கமான உற்பத்தியை அளவை விட குறைந்த உற்பத்தியைத்தான் செய்கின்றன. சாம்சங் வாரத்திற்கு 3 நாட்கள் ஆலையை மூடுகிறது.  மற்ற நாட்களில் குறைவான ஊழியர்கள். எல்ஜி வெளிநாட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தியை மட்டுமே செய்துவருகிறது.




இது குறித்து தெரிவித்த காட்ரெஜ் அப்லையன்சஸ் தலைமை அதிகாரி கமல், ஊரடங்கும், அதனைச் சார்ந்த கெடுபிடிகளும் கடுமையாக உள்ளன. இதனால் 15சதவீத கடைகள்தான் திறந்திருக்கின்றன. இந்த நேரத்தில் பொருட்கள் உற்பத்தி செய்து ஊழியர்களை பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருப்பது சரியல்ல. இது தான் ஆலைகள் மூடப்பட முக்கிய காரணம். கடைகளும், சந்தைகளும் பழைய நிலைக்கு திரும்பியதும் முழு மூச்சாக நாங்கள் உற்பத்தியில் இறங்குவோம் என்றார்.


இதுபோல டாடா வோல்டாஸ், ஹையர் போன்ற நிறுவனங்களும் தங்களது நிறுவனங்களை தற்காலிகமாக மூடியுள்ளன


பானாசோனிக் இந்தியாவின் சி இ ஓ மனிஷ் சர்மா, மீண்டும் கடைகள் திறக்கப்படும் நாளைத்தான் நிறுவனம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஏற்ப உற்பத்தி தொடங்கப்படும் என்றார். சம்மர் சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தான் ஏசி, ஏர்கூலர் போன்ற வியாபாரம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அனைத்தும் தேங்கியுள்ளன.  இந்த குறிப்பிட்ட வியாபாரம் மட்டும் கிட்டத்தட்ட ரூ.10000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையே செல்போன் தொழில் அமைப்பு இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கத் தலைவர் பங்கஜ், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சில நிறுவனங்கள் அத்தியாவசிய தேவையால் தொடர்ந்து இயங்குகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.




பல நிறுவனங்கள் ஊழியர்கள் தங்க ஏற்பாடு செய்து ஆலையை இயக்க நினைத்தாலும், சில ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது உற்பத்தியை தொடர சவாலாக உள்ளது. ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டால்தான் அனைத்து நிறுவனங்களும் உற்பத்தியை மீண்டும் தொடங்கும் என தெரிகிறது.