அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெழுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது வங்கக்கடலில் மேற்கு அந்தமான் கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22ஆம் தேதிக்குள் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக வலுப் பெற்று வரும் 26ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக மாறினால் ஒடிசா அல்லது மேற்கு வங்க கடற்பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டில் டவ்தே புயலக்கு பிறகு உருவாக போகும் இரண்டாவது புயல் இதுவாகும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மையம் புயலாக மாறினால் அதற்கு ஓமன் நாடு கொடுத்த 'யாஸ்' என்ற பெயர் வைக்கப்படும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் சூழலால் மீனவர்கள் யாரும் வரும் 21ஆம் தேதி முதல் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஏற்கெனவே சென்றவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு பருவமழை எப்போதும் முதலில் மே 25ஆம் தேதி முதல் அந்தமான் பகுதியில் தொடங்கும். இம்முறை நாளை முதல் அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் சூழல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பாக தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிதாக தோன்றும் புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்குமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் புயல், தன் நிலையை மாற்றினால் மட்டுமே தமிழகத்திற்கு பாதிப்பு இருக்கும் என தெரிகிறது. தற்போது தமிழகத்தில் தென் மாவட்டங்கள், டவ்தே புயலால் பரவலான மழையை பெற்றன. ஆனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் கோடை வெயிலில் தவித்து வருகின்றன. ஒரு வேளை இந்த புயல் தமிழகத்திற்கு மழை அளிக்கும் பட்சத்தில் அது வடமாவட்டங்களுக்கு பயனளிக்கலாம். இருப்பினும் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வானிலை மையம் சார்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.