இந்தியாவில் ஏப்ரல் மாத இறுதியில் திறக்கப்பட்ட  இரண்டு Apple நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் மாதத்திற்கு ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தில் படைப்புகளுக்கு கிடைக்கும் வரவேற்பை கண்டு பெருமை அடைவதாக ஏற்கனவே அதன்  தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். உலக அளவில் தொழில்நுட்ப சாதனங்கள் என்றாலே புகழ்பெற்ற  Apple நிறுவனம் இந்தியாவில் தனது வணிகத்தை அதிகரிப்பதற்கு நேரடி சில்லறை விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டது. அதன்படி, மும்பை, டெல்லி நகரங்களில் இரண்டு விற்பனை மையங்களை திறந்துள்ளது.


மாத வருவாய்:


இந்தியாவில் Apple நிறுவனத்தின் விற்பனை மற்றும் வருவாய் குறித்து தகவல்கள் 'Economic Times’ -ல் வெளியிட்டுள்ள ரிப்போட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு விற்பனை மையங்களிலிருந்து மாத வருமானமாக ரூ.22 முதல் ரூ.25 கோடி வரை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மும்பை மற்றும் புதுடெல்லியில் உள்ள இரண்டு விற்பனை மையங்களுக்கும் கொடுக்கும் வாடகையை விட லாபம் அதிகம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.


மும்பை விற்பனை மையத்திற்கு, ரூ.42 லட்சமும், புது டெல்லியில் உள்ள விற்பனை மையத்திற்கு ரூ.40 லட்சமும் Apple நிறுவனம் வாடகை தருவதாகவும் அந்த ரிப்போட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி உள்ளிட்ட எந்தவித பண்டிகை காலமும் இல்லாத நிலையிலே இந்த நிறுவனம் நல்ல லாபம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. விற்பனை மையம் திறகப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு அதிகளவிலான லாபம் கிடைத்த எலக்ட்ரானிஸ் ஸ்டோர்களில் ஒன்று என்ற சாதனையை மும்பை ஸ்டோர் பெற்றுள்ளது. அதோடு, பாந்ராவில் உள்ள விற்பனை மையம் திறக்கப்பட்ட அன்று மட்டுமே ரூ.10 கோடி அளவில் விற்பனையானது. மற்ற எலக்ட்ரானிக் கடைகள் மாதம் ஒன்றிற்கு ரூ.7 கோடி அளவிலே வியாபாரம் நடக்கும் சூழலில், Apple நிறுவனத்தின் ஸ்டோரில் இந்த அளவிற்கு விற்பனையாகியுள்ளது.


இந்தியாவில் Apple சாதனங்கள்:


Apple நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவில் கிடைத்தாலும், அவை எதுவுமே அந்நிறுவனத்தால் நேரடியாக இங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.  Apple தனது முதல் ஆன்லைன் சில்லறை விற்பனையை 2020 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், ஆப்பிள் நிறுவனத்திற்கு இருந்த ஒழுங்குமுறை தடைகள் காரணமாக, இந்தியாவில் நேரடி விற்பனை நிலையங்கள் தொடங்கப்படாமலேயே இருந்தன. இதனால், க்ரோமா போன்ற பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் மூலமாக தான், இந்தியாவில் Apple சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இறக்குமதி வரி மற்றும் விற்பனையாளர்களின் லாபம் ஆகியவை சேரவே, மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் ஆப்பிள் சாதனங்களின் விலை சற்றே அதிகமாக உள்ளது.  


சாதகங்கள் என்ன?


விற்பனை நிலையங்களை திறப்பதன் மூலம், Apple சாதனங்களுக்கான சர்வீஸ் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் நேரடியாக பெறலாம். அதோடு அந்த நிறுவனத்தின் அண்மைகால வெளியீடுகளான iPhone 14, iPad, AirPod, MacBooks, Apple Watches, HomePods மற்றும் Apple தொலைக்காட்சி என அனைத்து சாதனங்களும் கிடைக்கும். அதோடு, Apple சாதனங்களின் விலையும், அந்த குறிப்பிட்ட விற்பனை நிலையங்களில் கணிசமாக குறையும் என என எதிர்பார்க்கப்படுகிறது.