இந்தியாவில் ஐஐடியில் படித்த பெரும்பாலானோர் அமெரிக்காவில் வேலைபெற்று அங்கேயே செட்டில் ஆகி வருவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் ஐஐடியில் படித்து அமெரிக்காவில் உள்ள INTEL நிறுவனத்தில் 6 ஆண்டுகள் வேலை பார்த்து பின் இந்தியாவில் பால் பண்ணை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த கிஷோர் இந்துகுரி.



ஐஐடிக்கு சென்று படிப்பது என்பது தனக்கு மட்டுமல்ல தனது குடும்பத்தின் கனவாக இருந்ததாக குறிப்பிடும் கிஷோர் இந்துகுரி, ஐஐடி கரக்பூரில் படித்து பட்டம் பெற்றபின் 2000 ஆண்டு அமெரிக்காவிற்கு சென்றார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முடித்த அவர், ஹரிசோனாவில் உள்ள INTEL நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் வேலைபார்த்தபோது பணிநிமித்தமாக தென்கொரியா, கனடா நாடுகளுக்கு செல்லவேண்டி இருந்ததாகவும் அங்குதான் தரக்கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் குறித்து நிறைய கற்றுக் கொண்டதாக கூறுகிறார். ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்கு செல்லும்போது விவசாயம் நோக்கி இழுக்கப்பட்டதாக கூறும் கிஷோர். அதன்விளைவாக 2012ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் விவசாய தொழில்நுட்பம் குறித்து கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.


 



கர்நாடகாவில் ஒப்பந்தவிவசாயத்தை தொடங்கிய கிஷோர், அதிலிருந்து தனது பாதையை மாற்றி ஹைதராபாத் புறநகரில் உள்ள விவசாயிகளிடம் மாடு வளர்ப்பை பற்றி கற்றுக் கொள்ளத்தொடங்கினார். இந்தபகுதிகளில் ஓவ்வொரு விவசாயிகளிடமும் ஐந்து முதல் ஏழு கால்நடைகள் வரை இருந்தது. 2012ஆம் ஆண்டில் ஒருகோடி முதலீட்டில் 20 மாடுகளுடன் கிஷோரின் சித் பண்ணை தொடங்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் மாடுகளை தேர்வு செய்து வாங்குவது என்பது முக்கிய பணியாக இருந்த நிலையில் கால்நடைகள் குறித்த புத்தகமும் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைகளும் கிஷோருக்கு பேருதவியாக இருந்தது.



2014ஆம் ஆண்டுக்கு பிறகு தனது சேமிப்புகள் அனைத்தையும் பால்பண்ணைக்கு முதலீடாக கொண்டு வந்த கிஷோர், அறுபதாயிரம் ரூபாய் மதிப்பில் 60 மாடுகளை புதியதாக தனது பண்னையில் இணைத்தார். பால் விநியோகம் செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து அதற்கான தீர்வுகளையும் கிஷோர் முன்னெடுத்து வந்தார். காலை 6.30 மணிக்கு தவறாமல் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பால் கொண்டு சேர்வதை உறுதி செய்த அவர். அதற்காக தினமும் காலை 2.30 மணிக்கு எழுவதை வழக்கமாக்கி கொண்டார். 365 நாட்களுக்கும் கிஷோரின் இந்தபணி தொடர்ந்தது. தற்போது கிஷோரின் சித் பால்பண்ணையில் எழுபதிற்கும் அதிகமான பசுக்கள் மூலமும் பல்வேறு விவசாயிகளின் 1500 பசுக்கள் மூலமும் தினமும் 20,000 லிட்டர் பால் பெறப்பட்டு பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் விநியோகம் செய்யப்படுகிறது. இதன்மூலம் தனது நிறுவனம் ஆண்டுக்கு 44 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக கூறும் கிஷோர் இந்துகுரி, தனது பண்னையில் பெறப்படும் பால் அணைத்தும் 26 வகை சோதனைகளை கடந்தே வாடிக்கையாளர்களின் கைகளுக்கு செல்வதே தனது வெற்றிக்கான அடிப்படை என தெரிவிக்கிறார்.