நிலக்கரியை ஆதாரமாக கொண்டு மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் பெரும்பான்மையான மின்சாரத்தேவை அனல்மின் நிலையங்கள் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகின்றது. நாட்டின் 70 சதவீத மின் உற்பத்தி நிலக்கரியை சார்ந்தே இருக்கும் நிலையில் தற்போது எழுந்திருக்கும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் பாதிக்கும் மேலானவற்றில் 3 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. 


காரணம் என்ன? 


திடீரென முளைத்திருக்கும் நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவில் உள்ள முக்கிய நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்திருப்பது முதன்மையான காரணமாக சொல்லப்படுகிறது. அதே போல கொரோனா தொற்றால் வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்கும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில் நிறுவனங்களுக்கு அதிகளவு மின்சாரம் தேவைப்படுவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 


சர்வதேச அளவில் நிலக்கரியின் விலை 40 சதவீதம் அளவிற்கு அதிகரித்தது மட்டுமல்லாமல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் அளவும் குறைந்தது உள்ளிட்டவையும் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் மாநிலங்கள் நிலக்கரி நிறுவனங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையும் காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலக்கரி தட்டுப்பாட்டால்  பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  




தமிழ்நாட்டிலும் நிலைமை சிக்கலாகவே உள்ளது. வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்பட 5 அனல்மின் நிலையங்களில் இன்னும் 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு மட்டுமே உள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மேட்டூர், தூத்துக்குடி, வடசென்னை உள்ளிட்ட 5 அனல்மின் நிலையங்களில் 4320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. காற்றாலை, சோலார் உள்ளிட்ட இதர வழிகளில் 12 ஆயிரம் மெகாவாட் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. நிலக்கரி தேவையை சமாளிக்க தமிழ்நாடு அரசு நிலக்கரி இந்தியாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மத்திய அரசு வழங்க வரும் நிலக்கரியின் அளவு பாதியாக குறைந்துள்ளதாம். 


தமிழ்நாடு அனல்மின் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு 60 ஆயிரம் டன்க்கு மேல் நிலக்கரி தேவைப்படும் நிலையில், மின்வாரியத்துக்கு 37 ஆயிரம் என்ற அளவிலேயே கிடைக்கிறதாம். அக்டோபர் 8 ஆம் தேதி நிலவரப்படி 1.92 டன் அளவிலேயே நிலக்கரி உள்ள நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மட்டுமே இதைக்கொண்டு சமாளிக்க இயலும் என சொல்லப்படுகிறது. 





நிலைமையை சமாளிக்க தமிழக மின்சாரவாரியம் 20 மில்லியன் யூனிட் மின்சாரத்தை மின் எக்ஸ்சேஞ் இருந்து வாங்கி வருகிறது. தற்போது மழைக் காலம் என்பதால் ஆறுகளின் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிலிருந்து மின்சாரம் கிடைக்கும் என்பது ஆறுதல் செய்தியாக இருந்தாலும், நிலக்கரிகுறைப்பாட்டால் மின்சார உற்பத்தி தடைபடும் பட்சத்தில் இது தமிழகத்திற்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. 


அப்படியென்றால் நிலைமை எப்போதுதான் சரியாகும் என்ற கேள்வியை நிபுணர்களிடம் எழுப்பும் போது, மழைக்காலம் முடிந்து அடுத்து குளிர்காலம் தொடங்குவதால் மின் தேவை குறையும் என்றும்  உலகம் முழுவதும்  எரிவாயுவின் விலை குறைந்தால் அதன் மூலம் இயங்கும் மின் நிலையங்கள் செயல்பட துவங்கும் போது நிலைமை சீரடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.