மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் செயல்படுத்திவந்த ஆன்லைன் கல்விச் சேவையான அமேசான் அகாடமியை மூடுவதாக தெரிவித்துள்ளது. இந்த தளத்தில் வாயிலாக ஜெஇஇ போன்ற இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு ஆகியனவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அமேசான் செய்தி தொடர்பாளர், நாங்கள் தீவிர ஆய்வுக்குப் பின்னர் அமேசான் அகடமி திட்டத்தைக் கைவிடுவதாக முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இருப்பதால் இதனை நாங்கள் படிப்படியாக திரும்பப் பெறுகிறோம் என்று கூறியுள்ளார்.
இருப்பினும் அமேசான் அகடமியில் சந்தா கட்டி சேவையைப் பெற்றவர்களுக்கு ஓராண்டுக்கு அதாவது அக்டோபர் 2024 வரை புத்தகங்களை வழங்கிவிடும். அதேவேளையில் இந்த ஆண்டு சேர்ந்தவர்களுக்கான கட்டணம் முழுமையாக திரும்பத் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திட்டத்தை திடீரென திரும்பப் பெறுவது பற்றி அதன் செய்தித் தொடர்பாளர், அமேசானில் எங்களின் கனவு பெரியது. நாங்கள் பல புதிய விஷயங்களை பரிசோதனை செய்கிறோம். நிறைய சேவைகளை வழங்குகிறோம். அதற்கான வரவேற்பைப் பொறுத்து அதனை முன்னெடுத்துச் செல்கிறோம்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் நிறைய கல்வி சேவை நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்கும் இவ்வேளையில் அமேசான் அகடமியும் மூடுவிழாவை அறிவித்துள்ளது. அண்மையில் பைஜூஸ் 2500 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில் அமேசான் அகடமியும் தனது முடிவை அறிவித்துள்ளது.
தொடங்கி 2 ஆண்டுகளிலேயே இந்த மூடுவிழா நடந்துள்ளது. 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கியபோது ஆன்லைன் கல்விக்கான டிமாண்ட் உருவானது. அப்போது நிறைய ஆன்லைன் கல்வி நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் உதயமாகின. அப்போது அமேசான் நிறுவனமும் அமேசான் அகாடமியை தொடங்கியது. அமேசான் அகாடமி கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. ஐஐடி தேர்வு (IIT-JEE) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் உயர் கல்வி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அமேசான் அகாடமி தொடங்கப்பட்டது. இந்நிலையில், தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் அமேசான் அகாடமியை மூடுவதற்கு அமேசான் முடிவு செய்துள்ளது.
லே ஆஃப் காலகட்டம்:
கொரோனாவுக்குப் பின்னர் உலகில் பொருளாதார தேக்கநிலை உருவாகியுள்ள சூழலில், ட்விட்டர், பேஸ்புக், மெட்டா, அமேசான், இந்தியாவில் பைஜூஸ் என பல்வேறு நிறுவனங்களும் ஆட் குறைப்பு செய்து வருகின்றன. நிதி நிலையை சமாளிக்க லே ஆஃப் செய்வதாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாகவும் உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. லே ஆஃப்களால் இந்தியாவில் உள்ள எம்என்சி நிறுவனங்களிலும் லே ஆஃப் தாக்கம் ஏற்பட்டு விட்டதாக பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.