தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'தீப திருவிழா' என்ற பெயரில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.


சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் உருவாக்கப்படும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. 



கைவினைக் கலைஞர்கள், பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் மற்றும் விழா காலங்களிலும் பல கண்காட்சிகளை சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 'தீப திருவிழா' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை 21.11.2022 முதல் 10.12.2022 வரை நடைபெற உள்ளது.


இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கும்பகோணம், நாச்சியார் கோயில், மதுரை, வாகை குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட 1/2 அடி முதல் 6 அடி வரையில் அன்னம் மற்றும் பிரபை விளக்குகள், 1/2 அடி முதல் 3 அடி வரையில் மலபார் விளக்குகள் ஆலயங்களில் பயன்படுத்தக்கூடிய வாசமாலை, தூண்டா மணி விளக்குகள், அகல் விளக்குகள், மங்கள தீபம், பாலாடை விளக்குகள், விநாயகர் விளக்குகள், கிளை விளக்குகள், ரத தீபம், கொடி தீபம், அடுக்கு தீபம், பஞ்சாட்சர தீபம், திருமலை அன்னம் மற்றும் சங்கு சக்கர தீபம், லட்சுமி, பாலாஜி, தேவி, விஷ்ணு, முருகர், நவகிரசு தீபங்கள், அஷ்டோத்ர தீபம், பிரபை விளக்குகள், கிளி விளக்குகள், தாமரை விளக்குகள், அஷ்டலட்சுமி விளக்குகள், பிரதோஷ விளக்குகள், நாக தீபம், குபேர தீபம், நந்தா தீபம். கற்பகவிருட்சம் விளக்கு, லட்சுமி உருவம் கொண்ட உருளி, பலவித வடிவங்களில் உருளி, தென்கலை நாம விளக்கு, அருணாச்சலேஸ்வரர் விளக்கு, டெரகோட்டா அகல் மண் விளக்குகள், வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள் மற்றும் பலவித வடிவங்களில் விளக்குகள் போன்ற வகையில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 



இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் ரூபாய். 5 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 15 முதல் ரூ. 85,000 விலை வரை 500 வகையான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், இக்கண்காட்சியில் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான விளக்குகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி தங்கள் கார்த்திகை தீப விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடவும், மேலும் இந்த விளக்குகளை உற்பத்தி செய்யும் கைவினை  கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.