உலகின் மிகப்பெரிய இணையதள வர்த்தக நிறுவனம் அமேசான். அமேசான் நிறுவனம் கொடி கட்டிப் பறிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே உலகம் முழுவதும் பெரு நிறுவனங்கள் லே ஆப் எனப்படும் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
பிரபல நிறுவனமான அமேசான் நிறுவனத்திலும் லே ஆப் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் உணவு விநியோகம் சேவையை நிறுத்துவதாக அமேசான் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது, அமேசான் நிறுவனம் தங்களது மொத்த வியாபார விநியோக வியாபாரத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இணையதள வர்த்தக நிறுவனத்தின் பிரபல நிறுவனமான அமேசான் மொத்த வியாபார விநியோகத்தை(wholesale Distribution Business) நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமேசான் தெரிவித்த தகவலில், நாங்கள் இந்த முடிவை எளிதாக எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். அமேசானின் இந்த முடிவால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மொத்த வியாபார விநியோகத்திற்காக அமேசானின் இணையதளம் பெங்களூர், மைசூர் மற்றும் ஹூப்ளியில் இயங்கி வந்தது. அமேசான் நிறுவனம் உணவு விநியோக வியாபாரம், மொத்த வியாபார விநியோகம் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதால், இந்தியாவில் பணியாற்றும் அமேசான் பணியாளர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஆனாலும், இந்தியாவில் பணியாளர்கள் நீக்கம் நடக்காது என்று அமேசான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் லே ஆப் காரணமாக பெருநிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். கூகுள் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் இருந்து பாதி பணியாளர்களை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.