மதுரையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மதுரையின் பல்வேறு நகரங்களில் மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தேனி உள்ளிட்ட நகரங்களில் சாரல் மழை பெய்தது. மதுரையில் பல்வேறு இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனிடையே, கரூர் மாவட்டத்தில் 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
மாயனூர் கதவணையில் மீன் விற்பனை தீவிரம்
கிருஷ்ணராயபுரம் அருகே, மாயனூர் கதவணையில் மீன் விற்பனை தீவிரமாக நடந்தது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைப் பகுதியில் தேக்கப்படும் தண்ணீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இப்பகுதி மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடித்து வந்து, புதிய கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்று வருகின்றனர். இதில் ஜிலேபி மீன் கிலோ 100 ரூபாய், கெளுத்தி மீன் கிலோ 90 ரூபாய், விரால் மீன் கிலோ 650 ரூபாய் விலையில் விற்கப்படுகின்றனர். மீன்கள் வாங்க கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். மீனவர்கள் 350 கிலோ வரை மீன்கள் விற்பனையானதாக தெரிவித்தனர்.
அமராவதி அணையின் நீர்மட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. அமராவதி ஆற்றில் கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 686 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, வினாடிக்கு 522 கன அடியாக குறைந்தது.
நங்காஞ்சி அணையின் நீர்மட்டம்
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக, காலை ஆறு மணி நிலவரப்படி, வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்தது. நங்காஞ்சி ஆற்றில் வினாடிக்கு இரண்டு கன அடி தண்ணீரும், நான்கு கிளை பாசன வாய்க்கால்களில் தலா 10 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 39.37 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 39.35 கன அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம்
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.14 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னனியாறு அணையின் நீர்மட்டம்
கடவூர் அருகே உள்ள பொன்னனியாறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 27.97 அடியாக இருந்தது.