ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்து பதவி விலகியுள்ளார் முகேஷ் அம்பானி. அவரது பொறுப்பை ஏற்றுள்ளார் அவரது மகன் ஆகாஷ் அம்பானி. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தின் மூத்த வாரிசான ஆகாஷ் அம்பானி இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபர்களின் பட்டியலில் புதிதாக நுழைந்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றிருப்பதன் மூலமாக, ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ஆகாஷ் அம்பானியின் சொத்துகள் குறித்தும், மொத்த சொத்து மதிப்பு குறித்தும் இங்கே கொடுத்துள்ளோம்...
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தின் வாரிசு!
இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 40.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதன் இந்திய மதிப்பு சுமார் 2.6 லட்சம் கோடி ரூபாய். கடந்த 2018ஆம் ஆண்டு, உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் 19 இடத்தையும், இந்தியாவின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தையும் பெற்றவர் முகேஷ் அம்பானி. அவரது மகன் என்பதால் ஆகாஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தின் வாரிசாகக் கருதப்படுகிறார்.
உலகின் மிக விலையுயர்ந்த வீட்டில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி!
ஆகாஷ் அம்பானி மும்பையில் உள்ள 27 மாடி வீடான `அண்டில்லா’ கட்டிடத்தில் வசித்து வருகிறார். இதன் மதிப்பு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம். மேலும், சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை எட்டிய முதல் வீடாகவும் அண்டில்லா கருதப்படுகிறது. பல்வேறு தகவல்களின்படி, அண்டில்லா வீட்டில் 168 கார்கள் நிறுத்தக்கூடிய இடம், ஒரு சினிமா தியேட்டர், மேல்மாடியில் ஹெலிபேட், ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் தனித்தனியாக ஹெல்த் க்ளப், சுமார் 600 பணியாளர்கள் ஆகிய வசதிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் அம்பானியின் கார் கலெக்ஷன்!
ஆகாஷ் அம்பானி பல்வேறு சொகுசு கார்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். Rolls Royce Phantom Drophead Coupe, Range Rover Vogue, Mercedes Benz G63 AMG, W221 Mercedes Benz S-Class, BMW 5-Series, BMW i8, BMW 760 Li, W222 Mercedes Benz S-Class முதலான கார்கள் அவரிடம் உண்டு. மேலும், இந்தியாவிலேயே அதிக விலை மதிப்பு கொண்ட எஸ்.யு.வி ரக காரான Bentley Bentayga காரும் அவரிடம் உண்டு. இதன் விலை சுமார் 3.85 கோடி ரூபாய்.
ஆகாஷ் அம்பானியின் ஸ்போர்ட்ஸ் ஆசை!
கிரிக்கெட் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட ஆகாஷ் அம்பானி தனது தாய் நீட்டா அம்பானி, தந்தை முகேஷ் அம்பானி ஆகியோரால் நடத்தப்படும் `மும்பை இந்தியன்ஸ்’ அணியின் முடிவுகளில் பெரும் பங்காற்றுகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், பிசிசிஐ அமைப்பு மும்பை இந்தியன்ஸ் அணியை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 111.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்தது. இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளிலேயே அதிக பணம் மதிப்பு கொண்ட அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி இருந்து வருகிறது.