ஏர் இந்தியாவின் விமான சேவையை விரிவாக்கும் வகையில் கூடுதலாக விமானங்களை வாங்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


டாடா நிறுவனம் ஒப்பந்தம்


இந்திய அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை , சமீபத்தில் டாடா நிறுவனம் வாங்கியது. அப்போதிருந்து பல்வேறு மாற்றங்களை ஏர் இந்தியா செய்து வருகிறது. அதனை தொடர்ந்து, ஏர் இந்தியாவின் சேவையை அதிகரிக்கும் வகையில் கூடுதலாக விமானங்களை வாங்க டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.


டாடா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களில் 21 ஏர்பஸ் A320 , நான்கு ஏர்பஸ் A321 மற்றும் ஐந்து போயிங் என மொத்தம் 30 விமானங்களை குத்தகைக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.




”சேவையை விரிவுபடுத்த முடிவு”:


இது குறித்து திங்களன்று கருத்துகளை தெரிவித்த டாடா குழுமம்,  ஏர் இந்தியா போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து  30 விமானங்களை குத்தகைக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் ஏர் இந்தியாவின் சேவையை 25% க்கும் அதிகமாக விரிவுபடுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


நீண்ட காலமாக வளர்ச்சி பாதைக்கு செல்லாமல் இருந்த ஏர் இந்தியாவின் சேவையை, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இயக்குவதில் பெருமை கொள்வதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.


இந்நிலையில் கூடுதலாக வாங்கப்படும் விமானங்களின் சேவைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் , வரும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதத்திற்குள் முழுவதுமாக இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.