சர்வதேச பால் கூட்டமைப்பின் உலக பால் உச்சி மாநாடு 2022-ஐ பிரதமர் மோடி, திங்களன்று கிரேட்டர் நொய்டாவில் தொடங்கி வைத்தார். நான்கு நாள் உச்சி மாநாட்டில் தொழில்துறை தலைவர்கள், வல்லுநர்கள், விவசாயிகள், கொள்கை திட்டமிடுபவர்கள் உள்பட உலகளாவிய மற்றும் இந்திய பால் பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். 






‘ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தில் பாலின் அங்கம்’ என கருப்பொருளில் உச்சிமாநாடு நடைபெற்றது. இந்தியா எக்ஸ்போ சென்டர் & மார்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், உலகின் மற்ற வளர்ந்த நாடுகளைப் போலல்லாமல், இந்தியாவில் பால் துறையின் உந்து சக்தி சிறு விவசாயிகள்தான் என்று கூறினார். 


"இந்தியாவின் பால் துறையானது பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விட வெகுஜனம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது என வகைப்படுத்தலாம்" என மோடி கூறினார். விரிவாக பேசிய அவர், "பால்வளத் துறையின் ஆற்றல் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது.


உலகில் இதுபோன்ற மற்றொரு உதாரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். இன்று இந்தியாவில் இவ்வளவு பெரிய பால் கூட்டுறவு நெட்வொர்க் உள்ளது. இதுபோன்ற உதாரணத்தை உலகில் வேறு எங்கு கண்டுபிடிப்பது கடினம். இந்த பால் கூட்டுறவு சங்கங்கள், நாட்டின் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் இரண்டு கோடி விவசாயிகளிடம் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன.


இந்த மொத்த செயல்பாட்டிலும் இடைத்தரகர் இல்லை. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில் 70 சதவீதத்திற்கும் மேல் விவசாயிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு உயர்ந்த விகிதம் இல்லை. நாட்டின் பால் உற்பத்தித் துறை 70 சதவீத பெண் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பால் துறையின் உண்மையான தலைவர்கள் பெண்கள்தான். இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள்" என்றார்.


நாடு முழுவதும் கால்நடைகள் மூலம் பரவும் சமீபத்திய தோல் கழலை நோய் பற்றிப் பேசிய பிரதமர், பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாகவும், மேலும் உள்நாட்டு தடுப்பூசியையும் உருவாக்கி வருவதாகவும் கூறினார். 


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சமீப காலமாக, இந்தியாவில் பல மாநிலங்களில் தோல் கழலை நோய் காரணமாக கால்நடைகள் பலியாகியுள்ளன. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் இணைந்து முயற்சித்து வருகின்றன. நமது விஞ்ஞானிகள் இந்நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியையும் தயாரித்துள்ளனர்" என்றார்.