இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சியின் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. எல்.ஐ.சி பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனைக்கு வர உள்ள விவரம் தொடர்பான தகவல் இன்று வெளியானது. இந்நிலையில் ஐபிஓ என்றால் என்ன? பங்குச்சந்தையில் ஐபிஓ எதற்காக விற்கப்படும்?
ஐபிஓ என்றால் என்ன?
பங்குச்சந்தைகளில் ஒரு பெரிய நிறுவனம் அல்லது புதிய நிறுவனம் அல்லது ஒரு பழைய நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் நுழைய வேண்டும் என்றால் அது ஐபிஓ என்ற முறை மூலமாக நுழைய முடியும். அதாவது ஐபிஓ என்பது முதல் முறையாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படும் முறை. இந்த முறையின் மூலமாக ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குகளை முதல் முறையாக மக்களிடம் விற்பனை செய்ய முடியும். ஐபிஓ மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் மக்களிடம் விற்பனைக்கு வரும். அதற்கு முன்பு வரை அந்த நிறுவனத்தின் பங்குகள் நிறுவனத்தை தொடங்கியவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடம் இருக்கும்.
ஐபிஓ என்பது எங்கே விற்கப்படும்?
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும். முதன்மை பங்குச் சந்தை (primary market) மற்றும் இரண்டாம் ரீதி பங்குச் சந்தை(secondary market). இதில் ஐபிஓ என்பது எப்போதும் முதன்மை பங்குச் சந்தையில் விற்கப்படும். முதன்மை சந்தையில் ஐபிஓ மூலம் மக்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக வாங்குவார்கள்.
அதன்பின்னர் இந்த பங்குகளை மக்கள் தங்களுக்குள் விற்பனை செய்ய இரண்டாம் ரீதி பங்குச் சந்தையில் (secondary market) செய்ய வேண்டும். இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் அந்த பங்குச்சந்தையில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு பங்குச் சந்தையும் இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (செபி) கட்டுப்பாட்டிற்குள் வரும். செபி அளிக்கும் நெறிமுறைகள் மற்றும் அனுமதி மூலமே பங்குகளின் விற்பனை இந்தியாவில் நடைபெறும்.
எல்.ஐ.சி நிறுவனத்தின் 22ஆயிரம் பங்குகள் வரும் மே 4 முதல் 9 வரை விற்பனைக்கு வர உள்ளது. இதற்கான ஒப்புதலை செபி தற்போது அளித்துள்ளதாக தெரிகிறது. எல்.ஐசி நிறுவனம் 1956ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் எல்.ஐசி நிறுவனம் காப்பீட்டு பாலிசிகளை அளித்து வருகிறது. காப்பீட்டு பாலிசி அளிக்கும் துறையில் உலகளவில் எல்.ஐசி நிறுவனம் ஐந்தாவது பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த வருமான கடந்த 2020-21 நிதியாண்டில் சுமார் 6.82 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. எல்.ஐ.சியின் வராக்கடன் மதிப்பு 6 சதவிகிதமாக உள்ளதாக கணக்கு தனிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னதாக எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும் அப்போது ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எல்.ஐ.சி பங்குகளின் விற்பனை சற்று தள்ளி வைக்கப்பட்டது. மேலும் அப்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் 31.6 ஆயிரம் கோடி பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்து. அது தற்போது 22 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்