TN Business Environment: இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு 7.4 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழ்நாடு முதலிடம் பிடித்து அசத்தல்:
இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான சூழலை கொண்டுள்ள மாநிலங்கள் குறித்து, எகனாமிஸ்ட் இண்டலிஜென்ஸ் எனும் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. நாடு முழுவதுமுள்ள மாநிலங்களை ஆய்வில் எடுத்துக்கொண்டு, 1 முதல் 10 மதிப்பெண்களுக்கு முதல் 15 இடங்களில் பிடித்த மாநிலங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்கு ஏதுவான கொள்கைகள், அனுமதி வழங்குவதில் விரைவு நடவடிக்கைகள் என பல்வேறு அம்சங்கள் அடிப்படையிலான இந்த ஆய்வில் தமிழ்நாடு 7.4 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து 7.3 மதிப்பெண்களுடன் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 2025 முதல் 2029ம் ஆண்டுகளுக்கு ஏற்ற சூழல் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்கள் - ஆய்வில் கிடைத்த ரேங்க்
1. தமிழ்நாடு - 7.4 மதிப்பெண்கள்
2. குஜராத் - 7.3 மதிப்பெண்கள்
3. மகாராஷ்டிரா - 7.1 மதிப்பெண்கள்
4. கர்நாடகா, ஆந்திரா, டெல்லி - 6.9 மதிப்பெண்கள்
7. தெலங்கானா - 6.8 மதிப்பெண்கள்
8. ஹரியானா - 6.5 மதிப்பெண்கள்
9. கேரளா - 6.2 மதிப்பெண்கள்
10. உத்தரபிரதேசம் - 6 மதிப்பெண்கள்
11. பஞ்சாப், ராஜஸ்தான் - 5.8 மதிப்பெண்கள்
13. மத்திய பிரதேசம் - 5.6 மதிப்பெண்கள்
14. மேற்குவங்கம் - 5.1 மதிப்பெண்கள்
15. பீகார் - 4.6 மதிப்பெண்கள்
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்:
தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து இருப்பதாக, தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். அதில், “தொழில்துறைக்கு சாதகமான சூழல், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவம், பயனுள்ள கொள்கை மற்றும் இடைவிடாத செயல்படுத்தல் ஆகியவற்றை ஒருங்கிணைந்ததாக கொண்டுள்ள திராவிட மாடல் இதுதான்.
உலகளாவிய ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள் முதல் மின்சார வாகன நிறுவனங்கள் வரையிலும், பொறியியல் ஜாம்பவான்கள் முதல் மின்னணு நிறுவனங்கள் வரையிலும், பல்வேறு முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டைத் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இங்கு வெற்றி பெறுவது எளிது மற்றும் அதற்கு சாதகமான சூழலும் நிலவுகிறது.
”தமிழ்நாட்டோடு சேர்ந்து வளருங்கள்”
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த பதவிக்காலத்தில் பெற்ற தொடர்ச்சியான உலகளாவிய பாராட்டை போன்று, தமிழக வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. மேலும் எனது தமிழ்நாடு தொழில்துறை அணி மற்றும் தமிழ்நாடு தொழில்துரை அமைச்சகம் தமிழ்நாடு எனும் பிராண்டை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ஆற்றிய பணிக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவைப் பார்க்கும் ஒவ்வொரு முதலீட்டாளரும், தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் கீழே உள்ள வரைபடம் விளக்குகிறது. தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாட்டோடு இணைந்து வளருங்கள்” என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதத்தும் பதிவிட்டுள்ளார்.