ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா உடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால், அந்த நாட்டில் இருந்த பல வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். காபூலில் சிக்கித் தவித்த 200 இந்தியகள் நேற்று பாதுகாப்பாக நாடு திரும்பினர். மேலும், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடரும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்தியா உடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை தலிபான்கள் நிறுத்தியுள்ளது. இந்தத் தகவலை இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சகாய் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானின் போக்குவரத்து வழிதடங்கள் வழியாகவே இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், இறக்குமதி பொருட்கள் போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தியதாகவும் அஜய் சகாய் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆஃப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியது முதல் தலிபான்கள் மீண்டும் தாக்குதல் நடத்தில் பல நகரங்களை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சியை எடுத்தனர். அதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கந்தஹார் நகரத்தை தலிபான்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது. இந்நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
ஆப்கானிஸ்தான் நாடு தலிபான்கள் கையில் வீழ்ந்ததையடுத்து ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். அருகில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டில் அவர் தஞ்சமடைந்திருக்கக்கூடும் என உலக நாடுகள் நினைத்துவந்த நிலையில் அவர் அபுதாபியில் இருப்பதாக UAE அரசு அறிவித்தது.
மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் அஷ்ரப் கனி அதிகாரபூர்வ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆஃப்கன் தலிபான்களிடமிருந்து தப்பியோடிய பிறகு அவர் வெளியிட்ட முதல் வீடியோ அது. ஒருவேளை தான் தலைநகரை விட்டு வெளியேறி இருக்காவிட்டால் பெருத்த ரத்தவெள்ளம் ஏற்பட்டிருக்கும் என்றும் அதனைத் தவிர்க்கவே அந்த முடிவை தான் எடுத்ததாகவும் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.