அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் முதல் அர்ச்சகர் நியமனம்...!

’’தமிழில் அர்ச்சனை செய்வது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது, தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் எளிதில் புரிகிறது இதனால் மன நிறைவோடு செல்கின்றனர்’’

Continues below advertisement

பெரியாரின் கனவாக இருந்த திட்டமான, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த 1970 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. இது குறித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கூறும்போது, பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி கூறியிருந்தார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Continues below advertisement

திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற உடன், இந்து அறநிலையத்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்றும்  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் பல முக்கிய செயல்பாடுகளை செய்து வருகிறது.  அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 58  பேரை அர்ச்சகராக நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பணி ஆணை வழங்கினார். 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலில் வீரபாண்டியை சேர்ந்த முத்து பாண்டி என்பவர் முதல் முதலாக பிராமணர் அல்லாத சமூகத்தை சேர்ந்த அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு  அர்ச்சகருக்கான பயிற்சி பெற்று உள்ளார். பல அரசியல் சூழ்நிலை காரணமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம் செயல்படாமல் இருந்ததால் இவர் பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார். தற்போது இந்த திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருக்காளாத்தீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 


மேலும் அனைத்து திருக்கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்  என்ற அறிவிப்பு வெளியான நிலையில்  தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில்  தமிழில் அர்ச்சனை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயிலிலும், புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட முத்துப்பாண்டி உட்பட  மூன்று அர்ச்சகர்கள் தமிழிலேயே அர்ச்சனை செய்து வருகின்றனர். தமிழில் அர்ச்சனை செய்வது இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இது குறித்து புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட முத்துப்பாண்டி கூறுகையில், " அர்ச்சகராக வேண்டும் என்ற எனது குறிக்கோள் ஆனது, அர்ச்சகர் பயிற்சி பெற்று 14 ஆண்டுகளுக்கு பின்பு எனது கனவு நிறைவேறி உள்ளது. மேலும் அர்ச்சகர் ஆனபின்பு தமிழில் அர்ச்சனை செய்வது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் எளிதில் புரிகிறது இதனால் மன நிறைவோடு செல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola