அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு இழந்த, அனைத்து பங்குச்சந்தை மதிப்புகளையும் மீட்டெடுக்கும் சூழலை எட்டியுள்ளது. 


ஏற்றம் கண்ட அதானி போர்ட்ஸ்:


கடந்த ஜனவரி மாதம் வெளியான ஹிண்டன்பர்க்கின் அறிக்கையால் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்புகளும் பெரும் இழப்பை சந்தித்தன. அந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதில் அதானி குழுமத்தின் போர்ட் நிறுவனம் முதன்மையானதாக உள்ளது. அதானி போர்ட்ஸ் அண்ட்  ஸ்பெஷல் எகனாமிக் ஜோன்ஸ் லிமிடெட்டின்  பங்குகள், அந்த குழுமத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. செவ்வாயன்று அந்த நிறுவனத்தின் பங்குகள் 7.7% வளர்ச்சியை கண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிண்டன்பர்க் தெரிவித்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு, தற்போது அந்த பங்குகளின் மதிப்பு உயர்வு ஏற்பட்டுள்ளது.


மற்ற நிறுவனங்களுக்கும் ஏறுமுகம்:


அதானியின் துறைமுக வணிகமானது அவரது மிகவும் லாபகரமான சொத்துக்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது. பங்குச்சந்தை நிபுணர்களால் அதிகம் கண்காணிக்கப்படும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த சூழலில் அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களின் பங்கு மதிப்புகளும் வளர்ச்சியை கண்டு வருகின்றன.


காரணம் என்ன?


ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டுவது போல், அதானி குழுமத்திற்கு எதிரான பங்கு விலைக் கையாளுதலில் மோசடிக்கான உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்று  உச்சநீதிமன்றக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்து வருகின்றன. இதுதொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.  மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை முடிக்க நீதிமன்றத்தால் ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


ஹிண்டன்பர்க் சொன்னது என்ன?


அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க்  ”மோசடி, போலியான பெயரில் நிறுவனங்களை நடத்துதல், உறவினர்கள் மூலம் போலியான பரிவர்த்தனை மூலம் பங்குகளின் மதிப்பை உயர்த்தி காட்டுவது போன்ற பல மோசடிகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக” குற்றம்சாட்டியது. இதனால், அதானி குழுமத்தின் பங்குகள் சராசரியாக 20 சதவீத அளவிற்கு சரிவைச் சந்தித்தன. உலக பணக்காரர்கள் பட்டியலிலும் அதானி பெரும் பின்னடைவை சந்தித்தார்.


எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு:


அதானி குழுமம் மட்டுமல்ல, ஸ்டேட் பேங்க், ஐசிஐசிஐ உள்ளிட்ட சில வங்கிகளின் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தன. முக்கிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யும் கடும் பின்னடைவை சந்தித்தது. இதனால், அதானி குழுமத்திற்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.


மறுப்பு தெரிவித்த ஹிண்டன்பர்க்:


ஹிண்டன்பர்க் ஆய்வு மூலம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. ஆய்வை வெளியிடுவதற்கு முன்பு இதுதொடர்பான சரிபார்த்தலுக்கு தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதானி குழுமம் தெரிவித்தது.