இந்த வார தொடக்கத்தில்  உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி,  பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 7-ம் இடத்திற்கு மாறியுள்ளார். சரியான மதிப்பீடு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு சில தினங்களிலேயே அவரது சொத்துமதிப்பில் ஏற்பட்டுள்ளது என ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 


இதனால், தற்போது உலக மெகா கோடீஸ்வர்கள் வரிசையில் தற்போது 7-ம் இடத்திற்கு அதானி வந்திருந்தாலும், இன்னமும் அவர்தான் ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் பத்திரிகையின் தற்போதைய நிலவரப்படி, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில், முதல் இடத்தில் பிரான்சை சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் ஆர்னார்ட்டும், 2-ம் இடத்தில் எலான் மஸ்க்கும், 3-ம் இடத்தில் ஜெப் பெசாஸும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த படியாக, தொழில் அதிபர்கள் லேரி எல்லீசன், வேரன் பப்பட், பில் கேட்ஸ் ஆகியோர் உள்ளனர். அதானி 7-ம் இடத்திலும், இந்தியாவின் மற்றொரு மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, 11ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


அதானியின் சொத்து மதிப்பு இப்படி தடாலடி வீழ்ச்சியடைந்ததற்கு முக்கியகாரணமே, பங்குச்சந்தையில் அவரது நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததுதான். அமெரிக்காவைச்சேர்ந்த ஹிண்டன்பெர்க் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட  பங்குச் சந்தை மோசடி தொடர்பான சில தரவுகளால், அதானி உள்ளிட்ட பலநிறுவனங்களின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலும் கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அண்மைக்கால வரலாறு காணாத அளவில், பல பங்குகளில் சரிவுகள் இருந்தன. 


இந்தச்சூழலில்தான், அதானி நிறுவனத்தின் பல பங்குகளின் மதிப்பு சரிவு கண்டதால், அவரது சொத்து மதிப்பு கிடுகிடுவென குறைந்தது. ப்ளூம்பெர்க் எனும் வர்த்தக செய்தி குழுமத்தின் தகவலின்படி, நேற்று ஒரு நாளில் மட்டும், 6 மணிநேரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளில் 20 பில்லியன் டாலர்கள்  குறைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகிட்டத்தட்ட அதானியின் மொத்த சொத்துமதிப்பில், ஐந்தில் ஒரு பங்கு எனவும் அந்தத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அதானியின் சொத்துமதிப்பு, 96 பில்லியன்டாலர்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.






”வழக்கு தொடர்வோம்”:


இந்நிலையில், ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ள அதானி குழுமம், எமது நிறுவன பங்குகளை சரிவடைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


எதிர்கொள்ள தயார்:


இதற்கு கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், வழக்கை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும், இரண்டு வருடங்கள் தொடர் ஆய்வுக்கு பின்னரே, இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, உலக அளவில் கோடீஸ்வர்கள் பட்டியலில் 7-ம் இடத்திற்கு அதானி வந்திருந்தாலும், இன்னமும் அவர்தான் ஆசிய கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சொத்துமதிப்பு இன்றைய  அளவில், 96 பில்லியன் டாலர்களாக உள்ளது என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இன்றைய  தேதியில், உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர் யார் என்றால், பிரான்ஸைச் சேர்ந்த தொழிலதிபர் பெர்னார்ட் ஆர்னால்ட்தான். அவரது சொத்து மதிப்பு, 215 பில்லியன் டாலர்கள் என்றும் அவருக்கு அடுத்தபடியாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உள்ளார். அவரது சொத்துமதிப்பு, 181 பில்லியன் டாலர்கள் என்றும் போர்ப்ஸ்  பத்திரிகை குழுமம் தெரிவித்துள்ளது. 


Also Read: Budget 2023: இணைக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்... முடிவுக்கு வந்த 92 வருடகால வரலாற்றை தெரிந்துகொள்வோம்...