தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 97.05% நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 


5 சவரனுக்குட்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி மூலம் 12.19 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர் எனவும் 4,805 கோடி ரூபாய் அளவிற்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் ஐ. பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார். 


தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழே நகை வைத்துள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடைபெற்று இருப்பதும், பல வங்கிகளில்  போலி நகைகள் வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.


இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்ற பயனர்கள் தள்ளுபடியாகும் என எதிர்பார்த்தனர். கூட்டுறவு துறை வெளியிட்ட இந்த அறிக்கையால் தமிழ்நாடு முழுவதும் அரசின் மீது அதிருப்தி கிளம்பியது. 


இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி  வெளியிட்ட தகவலில், கடந்த ஆட்சியில் நகைக்கடன் மூலம் கோடிக்கணக்கில் மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி அடிப்படையில் உண்மையான ஏழை,எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றார்.  


குடும்ப அட்டை, ஆதார் விவரங்கள் சரியாக இல்லையென தெரிவித்து நிராகரிக்கப்பட்ட நபர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 (50%) பேர்களுக்கு கடன் தள்ளுபடி உண்டு என்றும் குறிப்பிட்டார். 


மேலும், குடும்ப அட்டை, ஆதார் விவரங்களை சரியான வழங்காதவர்கள் அதனை சரிசெய்து மீண்டும் அளித்தால் ஆய்வுசெய்து நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்தார். 


முன்னதாக, ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து அதற்கான தகுதிகள் குறித்தும், கடன் தள்ளுபடி பெறுவதற்கு எந்தெந்த நபர்களுக்கு தகுதி இல்லை என்பது குறித்தும் கூட்டுறவுதுறை பதிவாளர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 


அதில், கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்ற 48,84,726 பேரில் 35,37,693 பேருக்கு தள்ளுபடி கிடையாது எனவும், 28% பேர்களின் நகைக்கடன் மட்டுமே தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்றும், குடும்ப அட்டை மற்றும் ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது. 


அதேபோல், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற நபர் மற்றும் அவரது  குடும்ப உறுப்பினருக்கு பொது நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண