திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமம் உடையார் தெருவை சேர்ந்தவர் மளிகை கடை வியாபாரி ஏழுமலை. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் அவருடைய இளைய மகன் விஜய் வயது (22). இவர், தன்னுடைய அப்பாவின் மளிகை கடையை பார்த்து வருகிறார். தினந்தோறும் மளிகை கடையை கடைசியாக விஜய் தான் பூட்டி விட்டு வீட்டிற்கு வருவார். இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதி விஜய் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை பல்வேறு இடங்களில் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடினர். ஆனால் விஜயை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வராயா தலையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
அப்போது விஜயின் தொலைபேசி தொடர்புகளை வைத்து ஆய்வு செய்து வந்தனர். அப்போது விஜயின் தொலைபேசி சிக்னல் சு.நாவல்பாக்கம் பகுதியில் தொடர்பை இழந்துள்ளது. இதனை வைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நாவல்பாக்கம் கிராமம் அருகே உள்ள கோவிலின் பின்புறத்தில் உள்ள குளத்தில் விஜய் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 நபர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மொய்தீன் வயது (35), நல்லூர் கிராமம் உடையார் தெருவை சேர்ந்த நாராயணசாமி வயது (32), அவரது உறவினர் வரதன் வயது (41) ஆகிய 3 நபர்களும் சேர்ந்து முன்விரோதம் மற்றும் கொடுக்கல், வாங்கல் தகராறில் விஜய்யை இரும்பு கம்பி, மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியும் குத்தியும் உள்ளனர்.
பின்னர் கழுத்தை இறுக்கியும், கத்தியால் அறுத்தும் கொலை செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க விஜயின் உடலை பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 3 நபர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து இரும்பு கம்பி, கத்தி மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்யப்பட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்