யமஹா என்டைசர், பஜாஜ் எலிமினேட்டர், அவெஞ்சர் 220, ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350, சுசூகி இண்ட்ரூடர் போன்ற குறைந்த சிசியில் அறிமுகமான க்ரூசர் பைக்குகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இவற்றில் பஜாஜ் அவெஞ்சரை தவிர மற்ற அனைத்தும் விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டு விட்டன. இப்படிப்பட்ட ஒரு செக்மெண்டில் தான் களமிறங்க இருக்கிறது டி.வி.எஸ்.


டி.வி.எஸ். ரானின் 225சிசி!


இஞ்சின் மற்றும் பவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், 2018 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் பைக்காக வைக்கப்பட்ட செப்லின் பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது 225 சி.சி. ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் மோட்டாருடன் ஏறக்குறைய 20 ஹெச்.பி. பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




டி.வி.எஸ். ரானின் சிறப்பம்சங்கள் : 


டி.வி.எஸ். ரானின் 225 சி.சி. ஒரு நியோ-கிளாசிக் ஸ்டைலில் மிரட்டுகிறது. இது ஒரு பாரம்பரிய லோ-ஸ்லங் க்ரூஸர் போல இருந்தாலும் சில கோணங்களில் ஸ்க்ராம்ப்ளர் வகை பைக்குகள் போலவும் இருக்கிறது. கால்களை முன்னோக்கி வைத்து ஓட்டுவது போன்ற இருக்கை அமைப்பு, க்ரூசர் பைக்குகளுக்கே உண்டான க்ளாசிக்கான பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு, டூயல்-டோன் கலர்ஸ்கீம் மற்றும் பிளாக் ஃபினிஷ்ட் எஞ்சின் இதன் கம்பீரத்தை மேலும் கூட்டுகிறது.


தங்கநிற அப்சைட் டவுன் ஃபோர்க் இந்த செக்மெண்டுக்கு புதிது, அலாய் வீல்கள், அகலமான டயர்கள் மற்றும் முழு எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டர்ன் இன்டிகேட்டர்களுடன் பிரீமியம் க்ரூசர் பைக்காக களமிறங்க இருக்கிறது டி.வி.எஸ். ரானின்.




ஸ்மார்ட் போன் கால் அலர்ட், எஸ்.எம்.எஸ். அலர்ட், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கொண்ட டி.வி.எஸ்.ன் ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஸ்ட்ருமெண்ட் க்ளஸ்டர் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடிமனான எக்ஸாஸ்ட் இந்த பைக்குக்கு மேலும் அழகு சேர்க்கிறது. முன் மற்றும் பின் டிஸ்க் பிரேக்குகள் இரட்டை ஏபிஎஸ் வசதியை கொண்டிருக்கும் என நம்பலாம்.


யாரெல்லாம் போட்டியாளர்கள்?


220 சி.சி. பிரிவில் தனிக்காட்டு ராஜாவாக வளம் வரும் பஜாஜ் அவெஞ்சருக்கு டி.வி.எஸ். ரானின் கடும் போட்டியை தரலாம். வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களை பொறுத்தவரை அவெஞ்சரை விட டி.வி.எஸ்.ன் இந்த க்ரூசர் மிகவும் மேம்பட்டு இருப்பதால், ரானின் அறிமுக விலையை பொறுத்தே போட்டியும் அமையும்.
ஒருவேளை பஜாஜ் அவெஞ்சரை விட கூடுதலான விலையில் அறிமுகமானால் ஜாவா, ஜாவா 42, யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர், ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளன், ராயல் என்ஃபீல்டின் மீட்டியார் 350 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 உடன் மோத வேண்டி வரும்! 


எது எப்படியோ பைக் ஆர்வலர்களுக்கு சிறப்பம்சங்கள் நிறைந்த ஒரு க்ரூசர் பைக்காக டி.வி.எஸ். ரானின் இருக்கப்போவது உறுதி!


Car loan Information:

Calculate Car Loan EMI