Tata Sierra XUV 700 Facelift Triple Screen: டாடா சியாரா மற்றும் மஹிந்திராவின் XUV 700 ஃபேஸ் லிஃப்ட் எடிஷன் கார்கள், இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சியாரா, XUV 700 - 3 ஸ்க்ரீன் லே-அவுட்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை செய்யப்படும் கார்களில், சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை புதிய வழக்கமான அம்சங்களாக மாறிவிட்டன. ஆனால், சர்வதேச சந்தையில் நவீன கார் மாடல்களில் பயணிகளுக்கான மூன்றாவது டிஸ்பிளே என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது காரின் உட்புற அம்சங்களில் 3 ஸ்க்ரீன் லே-அவுட் என்பது எதிர்பார்க்கப்படும் அம்சமாக உருவெடுத்துள்ளது. இந்த அம்சத்தை தன்னகத்தே கொண்டதாக இரண்டு கார் மாடல்கள் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன. தகவல்களின்படி, டாடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சியாரா கார் மாடலும், மஹிந்திராவின் XUV 700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனும் தான் புதிய அம்சத்தை பெற உள்ளதாக கூறப்படுகிறது.
டாடா சியாராவின் கம்பேக்:
இந்திய சந்தையில் சுமார் 20 வருட இடைவெளிக்குப் பிறகு, இந்தியாவின் முதல் எஸ்யுவி ஆன டாடா சியாரா மீண்டும் புதிய வடிவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. டாடாவின் நெக்ஸான் மற்றும் ஹாரியர் கார் மாடல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த புதிய கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது. உள்நாட்டில் ஹுண்டாய் கிரேட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வாகனின் டைகுன், ஸ்கோடாவின் குஷக் மற்றும் ரெனால்டின் டஸ்டர் ஆகிய கார் மாடல்களுடன் சியாரா போட்டியிட உள்ளது. சதுரமான வடிவம் மற்றும் தனித்துவமான டிசைன் அம்சங்கள், அதன் ஒரிஜினல் சியாரா எடிஷனில் இருந்து பெறப்பட்டு போட்டியாளர்களிடையே இருந்து தனித்து நிற்க செய்கிறது.
சியாராவில் 3 டிஸ்பிளேக்கள்
சியாரா கார் வெளிப்புற தோற்றத்தில் இருந்து மட்டும் தனித்து நிற்கப்போவதில்லை. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்த காரானது தனது போட்டியாளர்களை போன்று இல்லாமல் 3 டேஷ்போர்ட் டிஸ்பிளேக்களை கொண்டிருப்பதை காட்டுகிறது. அதன்படி, சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவற்றுடன், பயணிகளுக்கான டச்ஸ்க்ரீனும் இடம்பெற்றுள்ளது. மூன்றுமே குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் டிஸ்பிளேவின் பயன் என்ன?
சியாராவில் உள்ள கூடுதல் டிஸ்பிளேவானது முன்னிருக்கையில் அமர்ந்து இருக்கும் பயணியால், நேவிகேஷன் மற்றும் மீடிய சேவைகளை செயல்படுத்தி ஓட்டுனருக்கு உதவ பயன்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும், தொலைக்காட்சி சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பவும் இந்த திரை உதவலாம். ஓட்டுனரின் கவனத்தை சிதறடிக்காத விதமாக தனி திரை மறைப்பு இந்த டிஸ்பிளே மீது போடப்பட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாத கால இடைவெளிக்குள், சியாராவை அறிமுகப்படுத்த டாடா முடிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் சந்தைப்படுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடக்கத்திலேயே இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்களில் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் வாயிலாக, இந்திய சந்தையில் 3 டிஸ்பிளேக்களை கொண்ட முதல் இன்ஜின் அடிப்படையிலான கார் என்ற பெருமையை சியாரா பெறும்.
மஹிந்திரா XUV 700 ஃபேஸ்லிஃப்ட்:
மஹிந்திரா நிறுவனமானது 3 டிஸ்பிளேக்கள் எனும் அம்சத்தை கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்திய, XEV 9e மாடலிலிருந்தே தொடங்கிவிட்டது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள XUV 700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷனிலும், இந்த புதிய அம்சத்தை இணைத்துள்ளதை சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உணர்த்துகின்றன. இது 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் மற்றும் பயணிகளுக்கான டச்ஸ்க்ரீன் என மூன்று டிஸ்பிளேக்களை பெறக்கூடும். பயணிகளுக்கான டச்ஸ்க்ரீன் ஆனது வீடியோ கேம் விளையாடவும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும், தொலைக்காட்சி சீரிஸ், திரைப்படங்கள், வீடியோ கால் மேற்கொள்வது மற்றும் நேவிகேஷன் ஆகிய அம்சங்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
XUV 700 ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் இன்ஜின் ரீதியாக மாற்றமின்றி அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜின்கள் தொடரும் என கூறப்படுகிறது. தற்போதைய எடிஷனின் எக்ஸ் - ஷோரூம் தொடக்க விலையே ரூ.14.49 லட்சமாக இருப்பதால், புதிய எடிஷனின் விலை ரூ.50 ஆயிரம் வரை உயரலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI