Tata Nano Electric Car: டாடா நிறுவனத்தின் புதிய மின்சார நானோ கார், முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ ரேஞ்ச் வழங்கும் என கூறப்படுகிறது.
டாடா நானோ எலெக்ட்ரிக் கார்:
டாடா நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், மின்சார கார் சந்தையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனிடையே, இந்தியாவின் மிகவும் மலிவு விலை கார் என டாடா அறிமுகப்படுத்திய நானோ கார் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், பழைய மாடல்களை இன்றும் சாலைகளில் நம்மால் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தான், அந்த காரை மீண்டும் மின்சார எடிஷனில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
டாடாவின் நானோ மின்சார காரில் ஆட்ண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேவை சப்போர்ட் செய்யக்கூடிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ப்ளூடூத் மற்று இணைய இணைப்பு வசதி கொண்ட 6 ஸ்பீக்கர்கள் அடங்கிய சவுண்ட் சிஸ்டம் இருக்கக் கூடும். பாதுகாப்பு அம்சங்களை பற்றி கூறுகையில் ABS உடன் கூடிய ஸ்டியரிங், பவர் விண்டோஸ் மற்றும் ஆண்டி-ரோல் பார்ஸ் ஆகியவை வழங்கப்படலாம். ரிமோட் செயல்பாடு மற்றும் டெமோ பயன்முறையும் இதில் சேர்க்கப்படலாம். வாகனத்தின் வரம்பு மற்றும் பிற முக்கிய தகவல்களைக் காண்பிக்கும் பல-தகவல் டிஸ்பிளே வழங்கப்படலாம். இந்த சாத்தியமான அம்சங்கள் நானோ மின்சார காரை நவீனமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரேஞ்ச், விலை விவரங்கள்?
பேட்டரி மற்றும் ரேஞ்ச் ஆகியவற்றை கவனத்தில் எடுத்துக்கொண்டால், அதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இடைநிற்றலின்றி 250 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடிய திறனுடன் பேட்டரி இடம்பெறக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப்புற மற்றும் குறுகிய தூர பயணங்களுக்கு ஏற்றவகையில் இது உருவாக்கப்படுவதாகவும் தெரிகிறது. டாடாவின் புதிய நானோ மின்சார காரின் விலை 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்த ரேஞ்சின் காரணமாக, மலிவு விலை மின்சார காரைத் தேடும் வாடிக்கையாளர்களிடையே நானோ மிகவும் பிரபலமடையக்கூடும். இந்த விலையானது நானோவை தற்போதுள்ள மின்சார வாகனங்களுக்கு வலுவான போட்டியாளராக மாற்றலாம்.
வெளியீடு எப்போது?
நானோ மின்சார கார் உற்பத்தி மற்றும் அறிமுகம் பற்றி டாடா மோட்டார்ஸ் தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டாடா நானோ மின்சார எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்டால், அது இந்திய மின்சார வாகனப் பிரிவில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரக்கூடும். இந்த வதந்தி உண்மையாகிவிட்டால், அது நானோவின் வருகை மட்டுமல்ல, மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய புரட்சியையும் ஏற்படுத்தும்.
Car loan Information:
Calculate Car Loan EMI