தேனியில் சினிமா பாணியில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை. இவர்களில் ஐந்து பேருக்கு  மேலும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு.

Continues below advertisement


தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் கடந்த 14.03.2023 அன்று ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் தனது மாமனார் ஆண்டராயர் அதிசயம் (68)என்பவரை ஒரு சிலர் கடத்தியதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஆண்டிபட்டி சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கார் நிற்காமல் சென்றுள்ளது. காவல்துறையினர் அந்த காரை துரத்திச் சென்ற போது அந்தக் காரின் பின்பகுதியில் முதியவர் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணியை வைத்து மூடி ஒரு சிலர் கடத்திச் சென்றதை கண்டறிந்தனர்.




காவல்துறையினர் காரை விடாமல் துரத்திச் சென்று நிலையில், வைகை அணை அடுத்துள்ள குள்ளப்புரம் பகுதியில் அந்த முதியவரை காரில் இருந்து தள்ளி விட்டு காரில் இருந்தவர்கள் தப்பிச்சென்றனர். காவல் சார்பு ஆய்வாளர் சுல்தான் பாட்ஷா முதியவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், இதுகுறித்த விபரங்களை காவல்துறையினருக்கு அனுப்பினார். பின்னர் காவல்துறையினர் சுற்றி வளைத்து காரை மடக்கிப் பிடித்து காரில் இருந்த ஆறு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம்  நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட நபர் காணாமல் போன ஆண்ட்ராயர் அதிசயம் என்று தெரியவந்தது.




மேலும் அவரது தோட்டத்தில் பணிபுரிந்த சங்கரலிங்கம் என்பவரும், அவரது நண்பரான புவனேஸ்வரன் என்பவரும் கொடுத்த தகவலின் படி, மதுரை மற்றும் தேனி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேர் ஆண்ட்ராயர் அதிசயத்தை கடத்தி அவரது குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சங்கரலிங்கத்தை கைது செய்ய சென்றபோது அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  இறுதி விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டது.




இதில் திருப்பதி,பிரபு,சுந்தர், கௌசிகன்,கருப்பசாமி (எ) அஜித், புவனேஸ்வரன் ஆகிய ஆறு பேருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 364ன் கீழ் ஆயுள் தண்டனைமற்றும் ரூபாய் ஆயிரம் அபராதமும்,1 முதல் ஐந்து வரை உள்ள குற்றவாளிகளுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 342 ன் கீழ் ஓராண்டு மெய்க்காவல் தண்டனை மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 304 ன் படி மேலும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் அனைவரும் சிறையில் இருந்த காலம் போக மீதமுள்ள தண்டனை காலத்தை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.