2020ஆம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற சிஇஎஸ் (CES) எனப்படும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சியில் விஷன்-எஸ் என்கிற கான்செப்ட் காரின் மூலமாக ஜப்பானை சேர்ந்த சோனி கார்ப்பிரேஷன் ஆட்டோமொபைல் துறையில் காலடி எடுத்து வைத்தது. முழு-எலக்ட்ரிக் செடான் காராக உருவாக்கப்பட உள்ள விஷன்-எஸ் மாடலில் கேமிரா சென்சார்கள், பொழுதுப்போக்கு அமைப்புகள் என சோனி நிறுவனத்தின் வித்தியாசமான தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆன நிலையில் சோனியின் விஷன்-எஸ் கான்செப்ட் கார் பொது சாலையை வந்தடைந்துள்ளது. அதாவது, தகுந்த அனுமதிகளுடன் பொது சாலையில் இந்த புதிய சோனி எலக்ட்ரிக் கார் சோதனை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னமும் கான்செப்ட் வடிவமைப்பிலேயே விஷன்-எஸ் இருப்பதை சோனி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கீழுள்ள வீடியோவில் காணலாம்.
இதன் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் என மொத்தம் 33 வெவ்வேறான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், சாலை, மற்ற வாகனங்கள் மற்றும் நிறத்தை அடையாளப்படுத்தி கொள்ளும் உயர்-தெளிவு கொண்ட HDR-இணக்கமான சிஎம்ஒஎஸ் (CMOS) இமேஜ் சென்சார்கள் மற்றும் இரவு நேர பார்வைக்கு திட நிலையிலான LiDAR உள்ளிட்டவை அடங்குகின்றன.
இவை மட்டுமின்றி தொலைவு உணர்தல் மற்றும் தொடர்புடைய வேகத்தை கண்டறிதல் உள்ளிட்டவற்றிற்கான ரேடார்களையும் தனது முதல் எலக்ட்ரிக் காரில் சோனி நிறுவனம் வழங்கியுள்ளது. முன்னதாக, இந்த எலக்ட்ரிக் செடான் காரை பற்றிய சில விபரங்களை சோனி வெளியிட்டு இருந்தது. அதாவது, இந்த இ-காரில் 200 கிலோவாட்ஸில் இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட உள்ளனவாம்.
இவை இரண்டின் மூலமாக அதிகப்பட்சமாக 268 பிஎச்பி வரையிலான ஆற்றலை பெற முடியும் என்கிறது சோனி. மேலும், இவற்றின் உதவியினால் சோனி விஷன்-எஸ் காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடலாமாம். சோனி விஷன்-எஸ் எலக்ட்ரிக் செடான் காரின் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 240கிமீ என்ற அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி ஆனது வருடந்தோறும் லாஸ் வேகாஸில் நடைபெற்றக்கூடிய நிகழ்ச்சியாகும். பொதுவாக இந்த கண்காட்சி புதிய வருடத்தின் முதல் மாதத்தில் நடத்தப்படுகிறது. இந்த வகையில் தற்போதும் (2022 ஜன.5- ஜன.8) இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் சோனி சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் ஒருவராக கலந்துக்கொண்ட சோனி நிறுவனத்தின் சிஇஓ கெனிச்சிரோ யோஷிடா, 'நாங்கள் சோனி எலக்ட்ரிக் வாகன அறிமுகத்தை எதிர்நோக்குகிறோம். சோனி ஒரு ஆக்கப்பூர்வமான பொதுப்போக்கு நிறுவனமாக நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது' என்றார். ஆனால், 2020இல் விஷன்-எஸ் காட்சிப்படுத்தப்பட்ட போது பல்வேறு வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அதாவது, விஷன்-எஸ் கான்செப்ட் காரை அதனுள் வழங்கப்பட்டிருக்கும் சென்சார்களுக்கும், தொழிற்நுட்பங்களுக்காகவே சோனி காட்சிப்படுத்தியதாகவும், மற்றப்படி ஆட்டோமொபைல் துறையில் களமிறங்கும் முடிவில் இந்த நிறுவனம் இல்லை எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சோதனை ஓட்டத்தின் மூலமாக இந்த வதந்திகளுக்கு எல்லாம் சோனி ஓர் முடிவுக்கட்டியுள்ளது.
நடைபெற்றுவரும் 2022 நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் சோனி நிறுவனம் சார்பில் புதியதாக எலக்ட்ரிக் எஸ்யூவி மாதிரி ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த எலக்ட்ரிக் வாகனம் குறித்த எந்தவொரு விபரமும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு புதிய புதிய கான்செப்ட் மாடல்களை காட்சிப்படுத்தினாலும், இன்னமும் விஷன்-எஸ் எலக்ட்ரிக் செடானின் தயாரிப்பு பணிகள் எப்போது துவங்கும் என்பதையே சோனி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI