இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை புல்லி பாய் எனும் செயலியில் பதிவிட்டு விற்பனைக்கு என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அந்த செயலியை உருவாக்கிய 21 வயது இளைஞர் நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட நிலையில் நீரஜின் பெற்றோர் தங்கள் மகன் குற்றமற்றவன் என்று கூறியுள்ளனர்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி புல்லி பாய் எனும் செயலியில் பெண் பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், முஸ்லீம் பெண் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அவர்களை ஏலம் விடுவதாக அந்த செயலியில் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் புல்லி பாய் செயலியின் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த புல்லி பாய் செயலியின் பின்னணியில் பெங்களூருவை சேர்ந்த பொறியியல் மாணவர் விஷால் ஜா என்பவர் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து பெங்களூர் விரைந்த மும்பை போலீஸார் விஷால் ஜாவை கைது செய்தனர். அவரிடம் 10 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியதில், விஷால் ஜா இந்துத்துவா ஆதரவாளர் என தெரியவந்தது. தன்னுடன் அரசியல் ரீதியாக முரணுள்ள பெண்களை ஏலம் விடுவதாக அறிவித்ததை ஒப்புக் கொண்டார். இந்த செயலியை தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த மேலும் இருவரை மும்பை இணைய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த செயலியை உருவாக்கி 21 வயது நீரஜ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார், அஸ்ஸாமில் பதுங்கியிருந்த இவரை டெல்லி சிறப்பு படை போலீஸார் கைது செய்தனர். இவருடன் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நீரஜின் தந்தை தஷ்ரத் பிஷ்னோய் கூறுகையில், "என் மகன் பத்தாம் வகுப்பில் 86% மதிப்பெண் எடுத்ததால் அசாம் அரசு அவனுக்கு லேப்டாப் கொடுத்தது. எந்நேரமும் அதிலேதான் இருப்பார். அதனை அவன் படிப்புக்காக பயன்படுத்தினான். ஜோர்ஹட்டில் உள்ள எங்கள் அண்டைவீட்டாரிடம் கூட கேட்டு பாருங்கள், என் மகன் நன்றாக படிக்க கூடியவன். அவன் இரவு பகலாக லேப்டாப்பின் முன்னே அமர்ந்திருப்பான், அதில் அவன் என்ன செய்கிறான் என்பது எதுவும் எங்களுக்கு தெரியாது, ஆனால் இவர்கள் குற்றம் சாட்டும் எதையும் என் மகன் செய்திருக்க மாட்டான்." என்று கூறினார். இந்த வழக்கை விசாரிக்கும் டிசிபி மல்ஹோத்ரா, "இந்த ஆப்பை கிட்ஹப்பில் உருவாக்கியது நீரஜ் தான், @bullibai_ ட்விட்டர் ஐடியும் மற்ற சமூக வலைதள ஐடிக்களும் தன்னால் தான் உருவாக்கப்பட்டது என்று நீரஜே ஒத்துக்கொண்டுள்ளார்", என்றார்.
"நான் அதிர்ந்து போனேன், போலீசார் வந்து நீரஜ் இருக்கிறாரா என்று கேட்டார்கள், இருக்கிறார்கள் என்றேன், உடனடியாக அவனை அழைத்து சென்றுவிட்டார்கள், செல்லும்போது மகன் என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. என் மக்களை படிக்க வைக்க நான் கடுமையாக உழைத்தேன், போலீசார் அவனை கைது செய்து செல்கையில் நான் அவனை, என் குடும்ப மானத்தை வாங்கிவிட்டாயே என்று திட்டினேன், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் என் மகன் குற்றமற்றவன். அவனை அழைத்து சென்றதில் இருந்து நாங்கள் யாரும் உணவு கூட உண்ணவில்லை, எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கள் மகன் இஸ்லாமிய எதிர்பாளன் என்றோ பாலியல் பிளவு மனப்பான்மை உடையவன் என்றோ எங்களுக்கு தெரியவே தெரியாது. அவன் ஒரு செய்தி சேனல் ஒன்றை தொடர்ந்து காணுவான், அதிலிருந்து தான் அவன் தூண்டப்பட்டிருக்க வேண்டும், அதை காண்பதை ஒரு வருடம் முன்பு அவன் நிறுத்தியிருந்தான்", என்று நீரஜின் தந்தை மேலும் கூறினார்.