ஸ்கிராம் 411, ஹண்டர் 350 போன்ற புதிய வகை மோட்டார் சைக்கிள்களை புல்லட் புகழ் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புத்தாண்டில் களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


புல்லட் என்றால் இளசு முதல் பெருசு வரை ஏன் யுவதிகளுக்கும் கூட அலாதி இஷ்டம் தான். சிம்புவைப் போல் ராசாலியே ராசாலியே எனப் பாடிக் கொண்டு செல்லும் லாங் ட்ரைவ் என்றாலும், தீர்ப்புச் சொல்ல எட்டப்பட்டிக்குள் புகுந்து சொல்லும் நாட்டாமை என்றாலும், லடாக்கில் தனியாக பயணம் செய்யும் சாகசப் பெண் என்றாலும் இடத்துக்கு ஏற்ப மிடுக்கைக் கூட்டிக் காட்டும் புல்லட். பார்வைக்கு மட்டுமல்ல பெர்ஃபார்மன்ஸும் பெஸ்டாக இருப்பதால் தான் புல்லட்டுக்கு ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் அதிகமாக இருக்கிறது. அப்புறம் எரிபொருள் விஷயத்தில் மட்டும் புல்லட் என்றால் யானையைக் கட்டி தீனி போடும் கதைதாங்க.


சரி பீடிகையை முடித்துக் கொண்டு ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார் சைக்கிள் பற்றி அறிவோம்.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பல்வேறு புது மாடல்களை அடுத்த ஆண்டு (2022) அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இவற்றில் ஸ்கிராம் 411 மற்றும் ஹண்டர் 350 உள்ளிட்டவை முதலில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டு வந்தது. 
தற்போது ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 மோட்டார் சைக்கிள் டீஸரை வெளியிட்டு உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டு மத்தியில் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. ஒற்றை இருக்கை கொண்ட ஹண்டர் 350 கிட்டத்தட்ட அதன் ப்ரோடோடைப் மாடலை போன்றே அச்சு பிறழாமல் காட்சியளிக்கும் எனத் தெரிகிறது. 


புதிய ஹண்டர் 350 மாடல் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட 349சிசி இன்ஜினே புதிய ஹண்டர் 350 மாடலிலும் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 22 பி.ஹெச்.பி. திறன், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகக் குறிப்பிடப்படுகிறது.


பிப்ரவரியில் ஸ்கிராம் 411!


அதேபோல், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய பைக் ஸ்கிராம் 411 அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிள் 'ஸ்கிராம் 411' எனும் பெயரில் அறிமுகமாகும் எனவும் கூறப்படுகிறது.  இருந்தாலும் இதன் தோற்றம் ஹிமாலயன் அட்வெஞ்சர் பைக்கை நினைவுபடுத்தும் எனக் கூறுகின்றனர். ஹிமாலயன் அட்வெஞ்சர் பைக்கில் ஸ்பிலிட் சீட் மற்றும் பெரிய வீல்கள் இருக்கும்.  




அதைத் தழுவி உருவாகி இருக்கும் ‘ஸ்கிராம் 411’ மாடல் மோட்டார் சைக்கிளில் சிங்கிள் சீட் மற்றும் ஹிமாலயன் அட்வெஞ்சரை விட சிறிய சக்கரங்களும் இருக்குமாம். இதன் விலையும் ஹிமாலயன் அட்வெஞ்சரை குறைவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.


புத்தாண்டு யாருக்கு எப்படியோ ராயல் என்ஃபீல்டு ரசிகர்களுக்கு விர்ர்...ரென்று பட்டையைக் கிளப்பும் போலத் தெரிகிறதே!


Car loan Information:

Calculate Car Loan EMI