தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்த வெங்கடாசலம் தனது வீட்டில் கடந்த டிசம்பர் 2 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் இதுவரைத் தெரியவரவில்லை. இதுகுறித்து போலீசார் அவரது வீட்டில் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை குறித்த கடிதம் ஏதேனும் உள்ளதா என்கிற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்கிடையேதான் தற்போது வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.அதற்கு முன்பு செப்டம்பர் மாதம் குற்றம் மற்றும் ஊழல் முறைகேடு சம்மந்தமாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த ஏ.வி.வெங்கடாசலம் மீது சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனைகள் நடத்தினர். இந்த சோதனையில் பணம் ரூபாய் 13.5 லட்சம், சுமார் 6.5 கிலோ தங்கம் (தோராயமாக சுமார் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் மதிப்பு) மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் ஆகியவை கண்டறிப்பட்டது. மேலும் பணம் ரூபாய் 13.5 லட்சம் மற்றும் இவ்வழக்கிற்கு சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும், இவர்வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் சந்தன துண்டுகள், கண்டறியப்பட்டு, தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது.
தற்கொலை எதற்கும் தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050