இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி நேற்று கவுகாத்தியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தால் 3வது வெற்றி இந்தியாவின் கையை விட்டுசென்றது. 


அதிக ரன்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா: 


இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் பதம் பார்த்தார். இதில், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துகளில்தான் அதிக ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 4 ஓவர்கள் வீசிய பிரசித் கிருஷ்ணா, 68 ரன்கள் விட்டுக்கொடுத்து டி20 வடிவத்தில் அதிக ரன் விட்டுகொடுத்த இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை தனது பெயரில் பதிவு செய்தார். இதன்போது பிரசித் கிருஷ்ணாவின் எகானமி ரேட்டும் 17.00 ஆக இருந்தது. இந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பிரசித் கிருஷ்ணாவிற்கு முன், இந்த சாதனை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது பெயரில் வைத்திருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு செஞ்சுரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சாஹல் 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுகொடுத்தார். மேலும் அந்த போட்டியில் அவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இந்த காலகட்டத்தில் சாஹலின் எகானமி ரேட்டும் 16.00 இருந்தது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பெயர் உள்ளது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இதே கவுகாத்தி ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 15.50 என்ற எகானமி ரேட்டில் 4 ஓவர்களில் மொத்தம் 62 ரன்கள் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளையும் எடுத்தார். இதன்மூலம், இந்த மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளர்கள் என்ற மோசமான சாதனையை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். 


போட்டி சுருக்கம்:


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டியைப் பற்றி பேசினால், இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 215.79 ஸ்டிரைக் ரேட்டில் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 123 ரன்கள் குவித்தார். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது. 


223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ட்ரெவிட் ஹெட் மற்றும் ஆரோன் ஹார்டி (16) ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தனர். 5வது ஓவரில் ஆரோன் ஹார்டியை அவுட் செய்து அர்ஷ்தீப் சிங் வெளியேற்ற, ஆறாவது ஓவரின் நான்காவது பந்தில், அவேஷ் கான் ட்ராவிஸ் ஹெட்டை ஆட்டமிழந்தார். ஹெட் 18 பந்துகளில் 8 பவுண்டரிகள் உதவியுடன் 35 ரன்கள் எடுத்திருந்தார். 


இதன்பின், ஏழாவது ஓவரின் இரண்டாவது பந்தில், 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஜோஷ் இங்கிலிஸை அவுட்டாக்கி பெவிலியன் வழி காட்டினார் ரவி பிஷ்னோய். இதன் பிறகு, நான்காவது இடத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் சதம் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.