Porsche Panamera: போர்ஷே நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பனமேரா மாடல் காரின் விலை, இந்திய சந்தையில் ஒரு கோடியே 68 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


போர்ஷே பனமேரா (Porsche Panamera):


இந்தியாவில் புதிய தலைமுறை பனமேராவின் அடிப்படை வேரியண்ட் மாடலுக்கான விலையை போர்ஷே வெளியிட்டுள்ளது. Porsche இன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி, V6 இன்ஜின் மூலம் இயங்கும் Panamera-வின் தொடக்க வேரியண்டின் விலை, ரூ.1.68 கோடி (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் பனமேராவின் விலை ரூ.1.57 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட் மற்றும் உபகரணங்களின் அடிப்படையில் இதன் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. செடான் பிரிவை சேர்ந்த இந்த காரின் பல்வேறு வேரியண்ட்கள், இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்ஜின் விவரங்கள்:


புதிய பனமேராவில் 2.9-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. ரியர் வீல் டிரைவ் உள்ளமைவு மற்றும் 8-ஸ்பீடு PDK டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது,  349 bhp மற்றும் 500 Nm டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது முந்தைய Panamera வெளிப்படுத்துவதை விட தோராயமாக 20 bhp மற்றும் 50 Nm கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்துகிறது. இது மணிக்கு 0-100 கிலோ மிட்டர் எனும் வேகத்தை வெறும்  5.1 வினாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 272 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த வாகனத்தை செலுத்த முடியும்.


காரின் சிறப்பம்சங்கள்:


இந்த மாடலானது வடிவமைப்பு, பவர்டிரெய்ன் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்பு மூலம் முந்தைய தலைமுறையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டுகிறது. 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மின்சார இருக்கைகள், மேட்ரிக்ஸ் எல்.ஈ.டி முகப்பு விளக்குகள், ஆறு ஏர்பேக்குகள், முழு-எச்டி 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் போர்ஷே கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் (பிசிஎம்) ஆகியவை அடிப்படை அம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன. 10.9-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆடியோ இடைமுகம், குரல் கட்டுப்பாடு, வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு, திருத்தப்பட்ட சென்டர் கன்சோல்,  போன்றவையும் இடம்பெற்றுள்ளன. 


இந்தியாவிற்கு ஹைப்ரிட் மாடல் கிடையாது:


பனமேராவின் V8 இன்ஜின் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபோர்ஷே திட்டமிட்டுள்ளது. அதேநேரம், V6 மற்றும் V8 ஆகிய இரண்டு மாடல்களின் ஹைப்ரிட் மாடல்களும் இந்தியாவிற்கு வராது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம்,  GTS வெர்ஷன் அடுத்த வருடம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. பனமேரா மாடலில் இந்தியாவிற்கான அதிக சக்தி வாய்ந்த வேரியண்டாக அது இருக்கும் என கருதப்படுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பனமேரா அந்த மாடலின் மூன்றாவது தலைமுறை என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI