Shubman Gill: ஹர்திக் பாண்ட்யா வெளியேறினால் குஜராத் அணியின் புதிய கேப்டனாக, சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யா:
மும்பை அணிக்காக 7 ஆண்டுகளாக விளையாடி வந்த ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, கடந்த 2021ம் ஆண்டு குஜராத் அணிக்கு சென்றதோடு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அந்த அணி அறிமுகமான முதல் தொடரிலேயே கோப்பையை வென்றதோடு, இரண்டாவது ஆண்டிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தான், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக, டிரேடிங் அடிப்படையில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மும்பை அணிக்கு தாவும் ஹர்திக் பாண்ட்யா?
வரும் 19ம் தேதி வீரர்களுக்கான ஏலம் நடைபெற உள்ள நிலையில், டிரேடிங் அடிப்படையில் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம் 12ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், குஜராத் அணி நேற்று வெளியிட்ட தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யாவின் பெயர் இருந்தாலும், 12ம் தேதிக்குள் அவர் மும்பை அணிக்கு டிரேடிங் அடிப்படையில் ஒப்பந்தமாகிவிடுவார் என கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி நடந்தால், குஜராத் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
குஜராத் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்?
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை, இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி வரும் சுப்மன் கில் நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கில் அசத்துவதோடு, இளம் வயது என்பதால் நீண்ட காலத்திற்கு குஜராத் அணிக்கான கேப்டனாக சுப்மன் கில்லால் செயல்பட முடியும் என நிர்வாகம் நம்புவதாக தெரிகிறது.
அறிவிப்பு தாமதமாவது ஏன்?
டிரேடிங் அடிப்படையில் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான அவகாசம், முதலில் நேற்று மாலை 5 மணி வரை தான் வழங்கப்பட்டது. ஆனால், அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தான் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான டிரேடிங்கிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தான், குஜராத்தின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் ஹர்திக் பாண்ட்யாவின் பெயரும் இருந்துள்ளது. ஆனால், ”தற்போது ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு மாறிவிட்டது உறுதியாகிவிட்டது. இதற்கு தேவையான பணத்திற்காக கடந்த ஆண்டு 17.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்த கேமரூன் கிரீனை, மும்பை அணி பெங்களூருவிடம் டிரேடிங் அடிப்படையில் மாற்றியுள்ளதாகவும்” பிசிசிஐ நிர்வாகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வரும் நிலையில், விரைவில் மும்பை அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.