பிரபல ஓலா நிறுவனம் சார்பில் சமீபத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஸ்கூட்டர்கள் தற்போது தானாக பின்னோக்கி செல்வதாக பயனாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பிரபல ஓலா நிறுவனம் கடந்த ஆண்டு S1 மற்றும் S1 Pro என்ற இரண்டு ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியது. குறைவான விலையில் அறிமுகமான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்பதற்காக பலரும் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறனர். ஆனாலும் விற்பனைக்கு வரும் சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்துவிடுவதால் ஓலா ஸ்கூட்டர் வாங்குவதே பலருக்கும் சவாலாக இருக்கிறது. ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் முன்பதிவு செய்தவர்களே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏனென்றால் ஸ்கூட்டருக்கு இந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை ஓலாவே எதிர்பார்த்திருக்கவில்லை போலும். தற்காலிகமாக தனது விற்பனையை நிறுத்தி வைத்திருந்த ஓலா ஸ்கூட்டர் நிறுவனம் வருகிற மார்ச் 17 தேதி மீண்டும் தனது விற்பனையை துவங்க உள்ளது.
இந்த சூழலில் டெலிவரி செய்யப்பட்ட Ola ஸ்கூட்டர் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென தானாகவே reverse மோடிற்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்வதாக கூறப்படுகிறது.Themangofellow என்பவர் கடந்த 9 ஆம் தேதி தனது ஓலா ஸ்கூட்டரை பார்க் செய்யப்பட்ட இடத்திலிருந்து பின்னோக்கி நகர்த்தியிருக்கிறார் . அப்போது ஓலா ஸ்கூட்டர் ரிவர்ஸ் மோடிற்கு சென்றுள்ளது. அதன் பிறகு பைக்கில் அமர்ந்து ஆக்ஸிலரேட்டரை கொடுத்த பொழுது , மீண்டும் பைக் ரிவர்ஸ் மோடிற்கு சென்றுள்ளது. அதன் பிறகு பைக்குடன் கீழே விழுந்த அந்த நபர் சிறு காயங்களுடன் அங்கிருந்து மீண்டதாகவும் , நல்ல வேளை நான் போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் இல்லை என பதிவிட்டிருந்தார். 48 மணி நேரம் ஆன நிலையில் ஓலா தனக்கு எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு ஸ்கூட்டர் சரி செய்யப்பட்ட நிலையிலும் தனக்கு ஸ்கூட்டரை பயன்படுத்துவது பாதுகாப்பாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் அதே போல மற்றுமொரு நபர் ஓலா ஸ்கூட்டர் தானாகவே ரிவர்ஸ் மோடிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார். அதில் “ நான் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஓலா ஸ்கூட்டரை வாங்கினேன். நான் ஆக்ஸிலரேட்டரை கொடுத்ததும் , ஸ்கூட்டர் எனது கட்டுப்பாட்டை மீறி பின்னோக்கி செல்ல துவங்கிவிட்டது, கிட்டத்தட்ட கொலை செய்ய பார்த்தது... பலத்த காயங்களில் இருந்து தப்பித்தேன் “ என தெரிவித்துள்ளார்.
ஓலா ஸ்கூட்டர் ரிவர்ஸ் பயன்முறையில் மணிக்கு மூன்று கிலோமீட்டர் வேகத்தையும், பார்க்கிங் உதவியுடன் ரிவர்ஸ் பயன்முறையைப் பயன்படுத்தும் போது மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தையும் தருகிறது. சமீபத்தில் சார்ஜ் செய்யப்பட்டிருந்த ஓலா ஸ்கூட்டர் தானாகவே தீப்பிடித்து எரிந்த நிலையில் , தற்போது தானாக பின்னோக்கி நகர்வது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI