அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று விஷயங்கள் என் வாழ்நாள் முழுவதுமே மறக்காது எனக் கூறியுள்ளார் நடிகர் ஆனந்த் பாபு.
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆனந்த்பாபு. இவர் பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்பாபு நடிகர் மட்டுமில்லாமல் நன்றாக நடனம் ஆடும் திறனும் கொண்டவர். இவர் 1983 முதல் 1999ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்து பிரபலமானவர். பின்பு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் வெளியான ஆட்ரங்கி ரே திரைப்படத்தில் இவர் தனுஷின் அப்பாவாக நடித்திருந்தார் மற்றும் சின்னத்திரையில் ஒளிபரப்பான மௌனராகம் தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல படங்களில் துணை நடிகராகவே நடித்துள்ளார். குடிக்கு அடிமையாகும் அளவிற்கு ஆனந்த் பாபு குடித்தே அவரின் வாழ்க்கையை தொலைத்து விட்டார் என்ற பேச்சும் உண்டு.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நாகேஷ் தனக்குக் கூறிய அறிவுரைகள். அவருடைய கால்ஷீட்டுக்காக எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் போட்டாப்போட்டி போட்டது எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது "நான் மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அப்பா மருத்துவமனையில் இருந்த போது நான் மருத்துவர்களைப் பார்த்து ரொம்பவே ஆசைப்படுவேன். அவர்களின் ட்ரெஸ்ஸிங் சென்ஸ், தூய்மை, அர்ப்பணிப்பு, உடல் மொழி என எல்லாவற்றையும் ரசித்துப் பார்ப்பேன். நான் ஜூவாலஜி குரூப் தான் எடுத்தேன். டாக்டராவதே எனது விருப்பமாக இருந்தது. அது கிட்டத்தட்ட நிறைவேறியது. நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போதுதான் எனக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. அப்பா என்னிடம் இந்த ஒரு படம் மட்டும் நடிக்கிறாயா என்றார். நானும் சரி என்றேன். ஆனால் ஏதோ கர்மா போல் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. டாக்டராக வேண்டிய நான் நடிகனான். ஆனால், சினிமாவில் நாகேஷ் சார் பையன் என்னம்மா டான்ஸ் ஆடுறாரு என்ற பெயரை நான் அப்பாவுக்கு வாங்கி கொடுத்தேனே தவிர அவர் போல் நடிப்பில் பெயர் வாங்கவில்லை. வாங்கவும் முடியாது.
அப்போ எனக்கு மூன்று விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். நீ நடிகனாகிவிட்டாய், உனக்கு ரொம்ப முக்கியமானது நேரம் தவறாமை. 9 மணி சூட்டிங் என்றால் முன்னாலேயே நீ அங்கு இருக்க வேண்டும். அப்புறம் நீ யாருடனும் நெருக்கமாகவும் பழக வேண்டாம், யாரையும் விலக்கி வைக்கவும் வேண்டாம். அத்துடன் மிக முக்கியமாக நடிப்பில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்றார். அதற்கு ஒரு உதாரணமும் உண்டு. ஒருமுறை சிவாஜி சார் ஃபோன் செய்தார். அப்போதுதான் அப்பா மகளிர் மட்டும் படத்தில் நடித்து முடித்திருந்தார். நான் தான் சிவாஜி சார் போனை அட்டெண்ட் செய்துவிட்டு அப்பாவிடம் கொடுத்தேன். அப்பா என்ன யூகித்தாரோ தெரியவில்லை ஃபோனை எடுத்துக் கேள் என்றார். நான் எக்ஸ்டன்ஷன் லைனில் கேட்க சிவாஜி சார்... நான் செய்யாத கேரக்டரை சிறப்பா செஞ்சிட்ட. வாழ்க உன் கலை என்றார். அதன் பின்னர் அப்பா, நடிப்பில் இப்படி பேர் வாங்கணும் என்றார். ஆனால் அது என்னால் முடியாது. அப்பாவை மிஞ்ச முடியவே முடியாது. அப்பாவுக்காக சிவாஜி சார், எம்ஜிஆர் சார், ஜெமினி சார் ஜெய்சங்கர் சார் எனப் பலரும் கால்ஷீட் போட்டாப் போட்டி போட்டார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார்.