ஓலா நிறுவனம் புதிதாக சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கவுள்ளது. ஓலா கார்ஸ் என்ற புதிய வாகனத் திட்டத்தை மேம்படுத்த இந்த வேலை வாய்ப்பை வழங்குவதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது. 


இந்தப் புதிய வேலைவாய்ப்புகள் விற்பனை, சேவை முதலான துறைகளில் அளிக்கப்படவுள்ளதாக ஓலா கார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அருண் சிர்தேஷ்முக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 


ஓலா கார்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் மாதத்தில் 5 ஆயிரம் பயன்படுத்திய கார்களை விற்றுள்ளது. ஓலா கார்ஸ் நிற்வனம் டெல்லி, மும்பை, பூனே, பெங்களுரு, சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் முதலான நகரங்களில் பயன்படுத்திய கார்களை விற்பனை செய்து வருகிறது. இது சண்டிகர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, இந்தூர் முதலான நகரங்களில் இந்த வாரம் முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அடுத்த 2 மாதங்களில், ஓலா கார்ஸ் நிறுவனத்தை 30 நகரங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் சுமார் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டிருப்பதோடு, இந்நிறுவனம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான லாபத்தை ஈட்டத் திட்டங்கள் மேற்கொண்டு வருகிறது. 


ஓலா ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் புதிய கார்களையும், பயன்படுத்தப்பட்ட கார்களையும் வாடிக்கையாளர்கள் வாங்குவதை ஓலா கார்ஸ் ஊக்குவித்து வருகிறது. மேலும், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குக் கார் வாங்குவது, அதன் தொகைக்கான பைனான்ஸ் உதவிகள், காப்பீடு, வாகனப் பதிவு, வாகனப் பராமரிப்பு, வாகனங்களுக்குத் தேவையான பொருள்கள், மீண்டும் காரை ஓலா கார்ஸ் நிறுவனத்திற்கு விற்பது எனப் பல்வேறு சேவைகளையும் வழங்குகிறது. 


மேலும் ஓலா நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு புதிய பராமரிப்பு நிலையங்களைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் பராமரிப்பு நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு உதவியுடன் உயர்தர பழுது பார்க்கும் வசதியும், ரோபோ உதவியுடன் பெயிண்ட் அடிக்கும் வசதி முதலானவை உருவாக்கப்படவுள்ளன. 



கடந்த செப்டம்பர் 23 அன்று, ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் ஓலா நிறுவனத்தைப் போல புதிதாக மற்றொரு தளத்தின் மூலம் வாகனப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றும் திட்டம் பற்றி வெளிப்படுத்தியிருந்தார். 


இந்தத் திட்டம் என்பது ஓலா நிறுவனத்தின் புதிய எதிர்காலப் பார்வையை வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிதாகத் தங்கள் அறிமுகத்தை நிலைநாட்டவும், கொரொனா பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்பட்டிருந்த தங்கள் டாக்ஸி வர்த்தகம் மீண்டு வரவும் இந்த எதிர்காலத் திட்டங்களை ஓலா நிறுவனம் செயல்படுத்தத் திட்டமிட்டு வருகிறது. 


இத்தகைய எதிர்காலத் திட்டங்கள் இருப்பினும், ஓலா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஸ்வயம் சௌரப், தலைமை ஆபரேடிங் அதிகாரி கௌரவ் போர்வால் ஆகியோர் தங்கள் பணிகளில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. 


Car loan Information:

Calculate Car Loan EMI