ஓலா ஸ்கூட்டர்:
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஓலா நிறுவனம் முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்நிறுவன வாகனங்கள் சார்ஜ் செய்யும்போது, சாலைகளில் செல்லும்போது திடீரென தீப்பிடிக்கிறது என, பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. ஆனாலும், அந்நிறுவன ஸ்கூட்டர்களின் விற்பனை குறைந்தபாடில்லை. இந்நிலையில், நடப்பாண்டு விற்பனையில் ஓலா ஸ்கூட்டர்களின் விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
5 ஆண்டுகளில் 6 கார்கள்:
இதுதொடர்பாக பேசியுள்ள ஓலா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், நடப்பண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மின்சார ஸ்கூட்டர்களை விற்றுள்ளோம். மிஷன் எலெக்ட்ரிக் எனும் திட்டத்தை நோக்கி செயல்பட்டு வருகிறோம். அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களும் மின்சார வாகனங்களாகவும், 2030க்குள் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து கார்களும் மின்சார கார்களாகவும் இருக்கும்.
2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் புதியதாக பல மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அதில், ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றோடு, ஸ்போர்ட்ஸ், க்ரூசர்ஸ், அட்வென்சர் மற்றும் ரோட் பைக்ஸ் ஆகிய பிரீமியம் மின்சார வாகனங்களையும் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். 2024ம் ஆண்டு எங்களது முதல் காரை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அதைத்தொடர்ந்து, 2027ம் ஆண்டிற்குள் 6 விதமான ஓலா கார்கள் இந்திய சந்தையில் கிடைக்கும் என, பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்:
இதனிடையே, உற்பத்தி திறனை விரிவுபடுத்தி, தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம், தென்கிழக்கு ஆசிய நாடுகள், லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு, மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யவும் ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை சீனா, தைவான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து கிடைக்கும் லித்தியம் - அயன் பேட்டரி செல்களை மட்டுமே பயன்படுத்தி வரும் ஓலா நிறுவனம், அடுத்த ஆண்டு இறுதிக்குள் சொந்தமாக லித்தியம் - அயன் பேட்டரியை தயாரிக்க உள்ளதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வேறு எந்தவொரு நாட்டின் உதிரி பாகங்களையும் சார்ந்து இருக்காமல், முழுமையாக உள்நாட்டிலேயே இந்த பேட்டரியை தயாரிக்கும் முயற்சியை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓலா நிறுவனம் செய்து வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதல் மற்றும் லித்தியம் - அயன் பேட்டரியை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நிறுவனமாகவும் ஓலா உருவெடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகத்தரம் வாய்ந்த வாகனங்கள்:
ரூ.1,00,000 தொடங்கி ரூ.50,00,000 வரையிலான விலை பட்டியலில் உலகத் தரம் வாய்ந்த வாகனங்கள், வலுவான முக்கிய தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட குறைந்த விலை விநியோகச் சங்கிலி கொண்டு தயாரிக்கப்பட உள்ளன. இதன்மூலம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுகூலம் எங்களுக்கு கிடைக்கிறது என, பவிஷ் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Car loan Information:
Calculate Car Loan EMI