ஓலா எலெக்ட்ரிகா நிறுவனத்தின் சுதந்திர தின விழா இன்று நடைபெற்ற நிலையில்,  முன்னதாக எதிர்பார்த்தபடி பெட்ரோல், டீசல் இன்றி முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும் ஓலா எலெக்ட்ரிக் கார் குறித்த அறிவிப்பை அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான பாவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.


2024ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் கார்


முன்னதாக நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வில், இந்தக் கார் 2024ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என்றும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை காரில் பயணிக்கலாம் என்றும் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் புரட்சியை கொண்டு வருவது குறித்து பேசிய பாவிஷ் அகர்வால், தமிழ்நாட்டில் உள்ள தங்களின் ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் மையமாக விரிவுபடுத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் 10 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சிறிய ஹேட்ச்பேக்


இந்தக் கார் இன்னும் தயாரிப்பு நிலையில் தான் உள்ளதாகக்க் கூறப்படும் நிலையில், எதிர்கால தேவைகளை முன்னிறுத்தி கார் தயாரிக்கப்படுவதாகவும், சிறிய ஹேட்ச்பேக் வகையைப் போன்று இந்தக் கார் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓலா எலெக்ரிக் கார் குறித்து கடந்த சில மாதங்களாக இணையத்தில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், பாவிஷ் அகர்வால், ”ஆகஸ்ட் 12ஆம் தேதி மதியம் 2 மணிக்கு உங்களை சந்திக்கிறேன்” என சஸ்பென்ஸ் வைத்து ட்வீட் செய்திருந்தார்.






புதுப்பிக்கப்பட்ட ஓலா ஸ்கூட்டர்


இந்த விழாவின் போது ஓலா அதன் பேசிக் மாடல் எஸ்1 ஸ்கூட்டரை மீண்டும் அறிமுகப்படுத்தி 99,999 ரூபாய் விலையை அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த மின்சார ஸ்கூட்டர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த ஸ்கூட்டர்கள் புதுப்பிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


 






மின்சார காரை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் சந்தையில் உள்ள சிறந்த நிறுவனங்களுக்கு ஓலா போட்டியாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்ஜி நிறுவனங்கள் ஏற்கனவே இந்திய சந்தையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹூண்டாய், கியா மோட்டார்ஸ் மற்றும் வால்வோ ஆகியவையும் இந்தியாவிற்கு மின்சார வாகனங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளன.


Car loan Information:

Calculate Car Loan EMI