இந்தியாவில் சமீபத்தில் தான் நடந்து முடிந்திருக்கிறது ஸ்பெக்ட்ரம் 5G ஏலம்.. அதே நேரத்தில் ஹோண்டாவில் 7G வரப்போகிறது. அந்த 5G-க்கும் இந்த 7G-க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏனென்றால் வரப்போவது ஹோண்டா ஆக்டிவா 7G. இந்த அடுத்த தலைமுறை ஆக்டிவா 7G-ன் டீசரை ஹோண்டா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது!



விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஹோண்டா ஆக்டிவா 7G-ல், எல்இடி விளக்குகள் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் போன்ற வசதிகளை எதிர்பார்க்கலாம்.


தற்போது விற்பனையில் உள்ள Activa 6G, 2020 ஜனவரியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோண்டா ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை ஆக்டிவாவைப் புதுப்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், இந்த வருடம் அடுத்த தலைமுறை ஆக்டிவா 7G-யை அறிமுகப்படுத்த இருக்கிறது.


20 வருடங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வந்த ஹோண்டா ஆக்டிவா அறிமுகமானது முதல் இன்றுவரை இதன் விற்பனை ஏறுமுகத்தில் தான் சென்றுகொண்டிருக்கிறது. இதன் போட்டியாளரான டிவிஎஸ் ஜூபிடரில் ஏராளமான வசதிகள் இருக்கும் நிலையில் தற்போது ஆக்டிவாவிலும் வசதிகளை மேம்படுத்தி அறிமுகப்படுத்த இருக்கிறது ஹோண்டா.


தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர் (eSP) தொழில்நுட்பம், சைலண்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர், 12-இன்ச் வீலுடன் கூடிய முன் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறத்தில் 3-ஸ்டெப் அட்ஜஸ்டபில் சஸ்பென்ஷன், சீட்டை திறக்காமல் எரிபொருளை நிரப்பி கொள்ள வசதியாக வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் DC LED ஹெட்லேம்ப் போன்ற வசதிகள் உள்ளன.


முழுமையான மெட்டல் பாடியுடன், கால் வைத்து ஓட்ட கூடுதல் இடவசதி மற்றும் ஓட்டுநரின் வசதிக்காக நீண்ட இருக்கை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதனுடன் அதிகரிக்கப்பட்ட வீல்பேஸ் மற்றும் அதிக கிரவுண்ட் கிளியரன்சுடன் உடன் வருகிறது.


வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற ஆக்டிவா, ஹோண்டாவின் 6 வருட வாரண்டியுடன் விற்பனையாகிறது. இதன் 110 சிசி BS 6 எஞ்சின் 7.7 HP பவர் மற்றும் 8.84 Nm டார்க்கை வழங்குகிறது.


அறிமுகமாக இருக்கும் ஆக்டிவா 7G விற்பனையில் இருக்கும் 6G-யை விட தரத்தில் மேம்பட்டதாக இருக்கும். இதில் ஹெட்லேம்ப் முதல் டெயில் லேம்ப் இண்டிகேட்டர்கள் வரை அனைத்தும் எல்இடி தான். மேலும் இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை ஸ்மார்ட் போனுடன் இணைத்து கொள்ளும் வகையில் புளூடூத் வசதி ஆப்ஷனலாக கொடுக்கப்படலாம்.


இந்த ஹோண்டா ஆக்டிவா 7G-ன் அடுத்த தலைமுறை எஞ்சின் முன்பைவிட அதிக எரிபொருள் சிக்கனமானதாகவும் அமைதியானதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலவரப்படி, ஆக்டிவா 6G-ன் Standard மாடலின் விலை ரூ.89,000/- (சென்னை ஆன்ரோட்) மற்றும் Deluxe மாடலின் விலை ரூ.91,000/- (சென்னை ஆன்ரோட்).


ஆக்டிவா 7ஜி விற்பனைக்கு வரும்போது இதைவிட சற்று கூடுதலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI