அண்மையில் கோவாவில் நடைபெற்ற 2022 ரைடர் மேனியாவில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய சூப்பர் மீடியர் 650 க்ரூஸர் பைக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. அந்நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த பைக் மாடலாக கருதப்படும், புதிய க்ரூஸர் மாடல் வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. அதைதொடர்ந்து, இந்தியா மட்டுமின்றி உலக சந்தைகளுக்கு 3 புதிய 650cc மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் பணிகளை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஷாட்கன் 650 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 650 ஆகிய புதிய பைக் மாடல்களின் சோதனை ஓட்டங்கள் இந்தியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து புதிய அட்வென்ச்சர் பைக் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கிளாசிக் 350 பாபர் மாடல் :
இதனிடையே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஏற்கனவே இருக்கும் பிளாட்பார்ம்களில் மட்டுமின்றி புதிய பிளாட்பார்ம்களிலும் மோட்டார் சைக்கிள்களை தயாரித்திட ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், பாபர்-ஸ்டைல் மாடல் மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஜெ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகத நிலையில், மோட்டார் சைக்கிள் கிளாசிக் 350 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பது மட்டும் உறுதியாகி உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற வகையில், புதிய மோட்டார்சைக்கிளின் ஸ்டைலிங் கிளாசிக் 350 மாடலை தழுவி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட்ட வடிவ முகப்பு விளக்கு மற்றும் பீக்-ஸ்டைல் எலிமண்ட் ஆகியவை இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் சிறப்பம்சங்கள்:
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்ட் இன்ஜின் வழங்கப்படுகிறது. அது 20 குதிரைகளீன் சக்தி மற்றும் 27 நியூட்டன் மீட்டர் இழுவிசை திறனை வெளிப்படுத்தும். மேலும், பாபர் மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் அம்சங்கள்:
வாட்டர் டிராப் வடிவிலான எரிபொருள் டேங்க், ரைடருக்கான இருக்கை, ஆப்-ஹேங்கர் ஹேண்டில்பார், வயர் ஸ்போக் வீல் மற்றும் ரியர் ஃபெண்டர் மவுண்ட் செய்யப்பட்ட டெயில்-லைட் இதில் இடம்பெற உள்ளன. இதன் ஹார்டுவேர் கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ட்வின் ஸ்ப்ரிங்குகள் சஸ்பென்சன் வசதிக்கு இடம்பெறலாம். இதன் பேஸ் மாடலில் டிரம் பிரேக் செட்டப், பிரீமியம் வேரியண்ட்களில் இருபுறமும் டிஸ்க் பிரேக் செட்டப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது வெளியீடு:
புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பாபர் ஸ்டைல் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், அது யெஸ்டி பாபர் மாடலுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது. மேலும் புதிய ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 வெளியீட்டிற்கு பின் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் 650cc மாடல் பைக்:
கிளாசிக் 350 பாபர் மாடல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து, 650cc பாபர் மாடல் பைக்குகளை உருவாக்குவதிலும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இண்டர்செப்டர் 650 மாடலின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரிப்பர் நேவிகேஷன் பாட், ABS, எல்.ஈ.டி. லைட்டிங், USD போர்க் என சூப்பர் மீடியரில் உள்ள பல அம்சங்கள் இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக சூப்பர் மீடியர் மாடலுக்கு நிகராக அல்லது சற்று குறைவாக 650cc பாபர் மாடல் மோட்டார் சைக்கிளின் விலை நிர்ணயிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI