கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனையும், அழிக்கும் கடவுளான சிவனையும், காக்கும் கடவுளான பெருமாளையும் இந்த மாதத்தில் நாம் வழிபடுவது வழக்கம். அன்றைய நாளில் வீடுகள்தோறும் அழகான வரிசையில் அகல் விளக்குகள் ஏற்றப்படும். அப்போது இரவு பகலாக தெரிவது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தும். இதுபோல் கோயில் பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறும். கார்த்திகை தீபத்தை கொண்டாட மக்கள் புதிய அகல் விளக்குகளை வருடம்தோரும் வாங்குவர். களிமண்ணால் செய்யப்பட்ட இந்த அகல் விளக்குகளில் பழையது இருந்தாலும், புதிதாக ஒரு சில விளக்குகள் ஆவது வாங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் அகல் விளக்குகள் அதிக அளவில் கார்த்திகை மாதத்தில் விற்பனையாகும். இதற்காக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபடுவர். அந்த வகையில் திருச்சியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்களும் மும்முரமாக விளக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி திருவானைக்காவல், நடு கொண்டையம்பேட்டையில், அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பருவ மழையால் சில நாட்கள் தடைப்பட்டிருந்தது. தற்போது மழை சற்று ஒய்ந்துள்ளதால் மீண்டும் விளக்கு தயாரிப்பில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அகல்விளக்கு தயாரிப்பதற்காக முதலில் மண்ணை வெயிலில் உலர்த்துகிறார்கள். அதன்பின்னர் தேவையான தண்ணீர் மற்றும் மணல் கலந்து பக்குவப்படுத்துகிறார்கள். பிறகு அந்த மண்ணை மின்சாரத்தில் சுற்றும் இயந்திரத்தில் இட்டு, ஒரு முகவிளக்கு, 5 முக விளக்கு என பல அளவுகளில் வடிவமைக்கிறார்கள். அதன்பின்னர் தயாரித்த விளக்குகளை வெயிலில் நன்கு காயவைத்து அதை சுடுவலையில் அடுக்கி தீயில் இட்டு தயார் செய்கின்றனர். இந்த கார்த்திகை பல விதவிதமான விளக்குகளை தயாரித்து வருவதாக தெரிவித்தார் மண்பாண்ட தொழிலாளி.
மேலும், மேஜிக் விளக்குகள், தேங்காய் விளக்குகள், பல முக விளக்குகள், இரண்டு அடுக்கு விளக்குகள் அதாவது கீழே உள்ள அடுக்கில் தண்ணீர் மற்றும் பூக்களும் மேலே உள்ள அடுக்கில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றும் வகையில் உள்ள விளக்குகளும் இந்த ஆண்டு புதிய வரவுகள் ஆகும். இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றனர். தொடர்ந்து பேசிய தொழிலாளர்கள் கடந்த கொரோனா காலங்களில் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கபட்டது. அதனால் வாழ்கையை ஓட்டுவதே மிக சிரமமாக இருந்தது. அதில் இருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம் என வருத்ததுடன் கூறினார்கள். ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இந்த ஆண்டு கார்த்திகை தீபம் திருநாளில் மண்பாண்ட தொழிலாளர் தயாரிக்கும் விளக்குகளை வாங்கி பண்டிகையை கொண்டாடினால் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்