மேற்கத்திய நாடுகளில் தானியங்கி கார்கள் அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அடுத்த லெவலுக்கான பாய்ச்சலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெர்மனி மியூனிச் நகரத்தில் நடைபெற்ற IAA Mobility 2021 என்ற நிகழ்ச்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் Vision AVTR என்ற புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கவுள்ள கார்களைக் குறித்த திட்டத்தை வெளியிட்டது. இந்தப் புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ள காருக்கு சிந்தனைத் திறன் இருப்பதாக அறிமுகம் செய்துள்ளனர். இந்தக் காரின் தொழில்நுட்பம் குறித்த அறிமுகம் கடந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற்ற CES 2020 என்ற நிகழ்ச்சியில் நடைபெற்றிருந்தது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் குறித்த திட்டத்தின் படி, மனிதர்களின் சிந்தனையில் அடிப்படையில் இந்தக் கார் பயணம் செய்யும். Brain-Computer Interface என்ற தொழில்நுட்பத்தின் மூலம், மனித மூளைக்கும், கணினிக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்தி, அதன் மூலம் காரைக் கட்டுப்படுத்தலாம் என்பது இந்தத் திட்டம். இதன் மூலம், பட்டன்களை அழுத்தியோ, ட்ச ஸ்க்ரீனைப் பயன்படுத்தியோ காரை இயக்காமல், ஓட்டுநரின் சிந்தனைக்கு ஏற்ப கார் பயணிக்கும்.
இந்தக் காரைப் பயன்படுத்தும் ஓட்டுநர் சிந்தித்தாலே, அதற்கு ஏற்ற திசையில் கார் பயணிக்கும். இதற்காக Brain-Computer Interface தொழில்நுட்பத்திற்கான கருவியின் மூலம், ஓட்டுநர் என்ன கட்டளையைச் சிந்திக்கிறார் என்பதை இந்தக் கார் உள்வாங்கிக் கொள்ளும். Brain-Computer Interface தொழில்நுட்பத்திற்கான கருவி காரை ஓட்டுபவரின் தலையின் பின் புறத்தில் மாட்டப்படும்.
இந்தக் காரின் டாஷ்போர்ட் டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதோடு, அதில் சிறிய புள்ளி அளவிலான லைட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தக் கருவி செயல்படத் தொடங்கிய சில நிமிடங்களில், அது மூளையின் செயல்பாட்டைக் கண்காணித்து, அளவிட்டு, பதிவும் செய்கிறது.
டேஷ்போர்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறிய லைட்டும் ஒவ்வொரு செயல்பாடுகளைக் குறிக்கிறது. கார் ஓட்டுபவர் ஒரு லைட் மீது தனது கவனத்தைச் செலுத்தும் போது, அந்த லைட்டுக்கு உரிய செயல்பாடு நிறைவேற்றப்படும். எனினும் இந்தக் காரின் வடிவமைப்பு விபத்துகளைத் தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்கள் உட்படுத்தப்பட்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனி மியூனிக் நகரத்தில் நடைபெற்று வரும் IAA Mobility 2021 என்ற சர்வதேச நிகழ்ச்சியில் இந்தத் தொழில்நுட்பத்தின் கான்செப்டை அறிமுகப்படுத்தியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம். Vision AVTR என்ற அழைக்கப்படும் இந்தப் புதிய தொழில்நுட்பம், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எதிர்கால இலக்குகளை முன்வைக்கிறது. மற்ற கான்செப்ட் கார்களைப் போலவே, இதிலும் ஸ்டீரிங் இல்லை. மேலும், பக்கவாட்டில் நகரும் சக்கரங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.
IAA Mobility 2021 நிகழ்ச்சியில் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ள கார்கள் பெரும்பாலானவை சூழலியல் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
Car loan Information:
Calculate Car Loan EMI