இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. பொதுப்போக்குவரத்தை விட சொந்த வாகனங்களில் பயணிக்கவே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் அதிகரித்த வாகனங்களின் பயன்பாட்டின் காரணமாக சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரித்துள்ளது. எரிபொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தான் தற்போது, மின்சார வாகனத்தின் பயன்பாடு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. அதனை கருத்தில் கொண்டே பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும், புதுப்புது மாடல் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதுப்புது வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த நிகழ்ச்சியில், ஜாய் இ பைக் நிறுவனமும் இந்திய சந்தையில் தனது புதிய அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த புதிய ஸ்கூட்டர் ஜாய் மிஹோஸ் என அழைக்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வதோதராவில் உள்ள வார்டுவிசார்டு R&D குழுவினரால் உருவாக்கப்பட்டு உள்ளது.
பேட்டரி விவரம்:
மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1500 வாட் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தை வெறும் ஏழு நொடிகளில் எட்டிவிடும் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஜாய் மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 74V40Ah லி-அயன் சார்ந்த பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது. நான்கு மணி நேரத்தில் இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும் என கூறப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
மிஹோஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரெட்ரோ டிசைன் கொண்டுள்ளது. இதன் முன்புறம் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், வட்ட வடிவம் கொண்ட ரியர் வியூ மிரர்கள், முன்புற இண்டிகேட்டர்கள் அப்ரானில் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் வளைந்த பாடி பேனல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ-ரிவர்சபில் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.
பாதுகாப்பிற்கு சைடு ஸ்டாண்டு சென்சார், ஹைட்ராலிக் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. இத்துடன் பேட்டரி ஸ்டேட்டஸ் ரிமோட் அக்சஸ் வசதி, ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ், ஆண்டி-தெஃப்ட் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
விலை விவரம்:
இந்திய சந்தையில் புதிய ஜாய் மிஹோஸ் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மெட்டாலிக் புளூ, சாலிட் பிளாக் கிளாசி, சாலிட் எல்லோ கிளாசி மற்றும் பியல் வைட் என நான்கு வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜாய் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் நாடு முழுவதும் விரைவில் படிப்படியாக தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Car loan Information:
Calculate Car Loan EMI